பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பணியாளர் தேர்வு வாரியத்தால் (எஸ்.எஸ்.சி), ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரம் (சி.ஜி.எல்.) தேர்விற்கு 7,500-க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்விற்கான வயது வரம்பு 19 வயது முதல் 30 வயதுவரை ஆகும். மேலும் வயது வரம்பு பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த தேர்விற்கு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதிக்குள் ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட தேர்விற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வுக்கு தயார் செய்யும் விதம் மற்றும் பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு நடைபெறும்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment