எடை இழக்க விரும்புபவர்களுக்கு கார்டியோ பயிற்சி ஒரு சிறந்த ஆப்ஷனாக அமையும். ஒருவர் தினமும் எந்த அளவிற்கு கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அந்த வகையில், எடை இழப்புக்கு உதவக் கூடிய ஒரு பிரபலமான பயிற்சி முறை தான் கார்டியோ. கலோரிகளை எரிப்பதன் மூலமும், தசைகளை ஈடுபடுத்துவதன் மூலமும், உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலமும், கட்டுப்படுத்தப்பட்ட சுவாசத்தை ஊக்குவிப்பதன் மூலமும் இது உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.
கார்டியோவில் நிறைய வகைகள் உள்ளன, உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தேர்வு செய்தால் கண்டிப்பாக பலனளிக்கும். தினமும் எவ்வளவு நேரம் கார்டியோ செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.
எடை இழப்புக்கான கார்டியோ பயிற்சிகள் : கார்டியோவில் நடைபயிற்சி செய்தல், ஜாகிங் செய்தல், நீச்சலடித்தல், சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், உயர்-தீவிர இடைவெளி பயிற்சி (HIIT), ஜம்பிங் ரோப், ரோயிங் மற்றும் நீள்வட்டப் பயிற்சி ஆகியவை அடங்கும். நீங்கள் எடை குறைப்பதில் தீவிரமாக இருந்தால், கார்டியோ உடற்பயிற்சி வகுப்புகளிலும் சேரலாம். இந்த உடற்பயிற்சிகள் அனைத்தும் உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து கலோரிகளை எரிக்க உதவுகின்றன.
சரியான முடிவுகளை பெற ஒருவர் எந்த அளவிற்கு கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும்? உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் தினமும் கார்டியோ பயிற்சிகளை செய்வது அவசியம் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் தினமும் எவ்வளவு மணி நேரம் கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். பொதுவாக, நீங்கள் இப்பொழுது தான் கார்டியோ பயிற்சிகள் செய்யத் தொடங்கி உள்ளீர்கள் என்றால், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான-தீவிரமான கார்டியோ பயிற்சிகளை தவறாமல் செய்வதை இலக்காக அமைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் இப்பயிற்சிகளை வெகு நாட்களாக செய்து வந்தால், அதி-தீவிர கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளத் தேர்வு செய்தால், வாரத்திற்கு 75 நிமிடங்களுக்கு கார்டியோ பயிற்சிகளை செய்யலாம். அதே சமயம், எடை இழக்கும் ஆர்வத்தில் கார்டியோ பயிற்சிகளை அளவுக்கு அதிகமாகவும் செய்யக் கூடாது. உங்கள் உடல் போதும் என்று சிக்னல் காட்டினால், நிறுத்தி விடுங்கள். ஏனெனில், அதிகப்படியான கார்டியோ பயிற்சிகள் எரிச்சல் மற்றும் காயங்களுக்கு வழிவகுக்கலாம்.
இருப்பினும், மெதுவாகத் தொடங்கி படிப்படியாக உங்கள் வேகத்தையும் தீவிரத்தையும் அதிகரிப்பது முக்கியம். அதே சமயம், கலோரி அதிகமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், எவ்வளவு தான் ஓடினாலும், அது உங்களுக்கு பலனளிக்காது. தினமும் சைக்கிளிங் கூட செய்யலாம். எனவே, சமச்சீரான உணவு உண்டு, மேற்கூறியவாறு போதிய கார்டியோ பயிற்சிகளை செய்தாலே போதும், உங்கள் தொப்பைக்கு குட் பை சொல்லிவிடலாம்!
No comments:
Post a Comment