Search

வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 புதிய ஊர்களில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனித்து அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம். 

* சொத்தின் உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மைனராகவோ இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் கிரய பத்திரத்தில் கார்டியன் கையெழுத்து வாங்க வேண்டும். 

* உரிமையாளர் நொடிப்பு நிலை அடைந்திருந்தால் அதிகார பூர்வமாக கோர்ட்டுஅறிவித்த சொத்து காப்பாளர் மூலம் எழுதி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து வழிபாட்டு தலங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் தக்க நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

* சொத்துக்களுக்கான விற்பனை உள்ளிட்ட பரிவர்த்தனை பத்திரங்களை எழுத அரசு உரிமம் உள்ள ஆவண எழுத்தர்களை அணுக வேண்டும். காரணம், சொத்துக்களுக்கான பத்திரங்களை எழுதுபவர் ஒரு வகையில் ஆவணத்திற்கான சாட்சி போன்றவர். 

* கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற அனைத்து பங்குதாரர்களின் சம்மதம் அவசியம். மேலும், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு இயற்றிய தீர்மானப்படி சொத்து விற்கப்பட அனுமதி மற்றும் கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 

* இந்தியாவை விட்டு வெளியேறியவர் மற்றும் குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கப்பட்டு இருந்தால், அரசு பாதுகாப்பாளர் மட்டுமே சொத்தை விற்க உரிமை பெற்றவர் ஆவார். மேலும், வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.

* நிலம் அல்லது கட்டமைப்பில் பல காலம் குத்தகைதாரராக இருப்பவருக்கு சொத்தை வாங்கி கொள்ளும் உரிமை உண்டு. அதனால், சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும். 

* சொத்தை எழுதி கொடுப்பவரின் பெயரும், இன்சியலும், அவரது அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, தாய் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். 

* சொத்துக்கான தாய்ப்பத்திரம் இல்லாதபோது சொத்தை எழுதிக் கொடுப்பவர்களால் காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும். 

* கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, சொத்து எவ்வாறு கிடைத்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது என்பதற்கான அனைத்து லிங்க் பத்திரங்களையும் தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது பாதுகாப்பானது.

* கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சர்க்கார் வரி வகைகள், சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்கள் ஒப்படைப்பு, பின் வரும் காலங்களில் பத்திரத்தில் பிழைகள் இருப்பது, வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக்கொடுப்பது ஆகியவற்றுக்கான உறுதியை அளித்திருப்பது நல்லது. 

* ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணதாரர் முகவரி, சொத்துரிமை, சொத்து விவரங்கள் ஆகியவை ஆன்லைன் இன்டெக்ஸ் செய்யப்பட்டு, ஆவணத்தின் சுருக்க முன் வரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பின்பு பதிவுக்கு செல்லுவது மிக, மிக முக்கியம். 

* பொதுவாக பத்திரங்களை கம்ப்யூட்டர் டைப் செய்து பிரிண்டிங் செய்யும் முன்பு ஒரு டிராப்ட் மாதிரி எடுத்து அதில் பிழைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பதிவு செய்த பின்பு பிழைகளை கண்டறியும் நிலையில், ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் நேரில் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து, பிழை திருத்தல் ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment