எல்லா நேரங்களிலும் பெரியவர்கள் மட்டும் தனியாக பயணிக்கும் வாய்ப்பு இருக்காது. சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் பயணிப்பதை பல நேரங்களில் பார்த்திருப்போம். நாமும் கூட குழந்தைகளுடன் பயணித்திருப்போம். அப்போது தான் சிறு குழந்தைகளுடன் பயணம் செய்வது எளிதானது அல்ல என்பதே புரியும்.
பைகளை பார்ப்பதா, குழந்தையை பார்ப்பதா, வழியை பார்ப்பதா இவை அத்தனையையும் எப்படி ஒருங்கே சமாளிப்பது என்ற குழப்பம் எழும். இப்படி குழந்தையுடன் தனியாக பயணம் செய்யும் தாய்மார்களின் சிரமம் புரிகிறது. குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் அதற்கேற்ப உங்கள் தயாரிப்புகளையும் உங்களுக்கு இப்போது நாங்கள் சொல்கிறோம்.
சாதாரணமாகவே பயணம் மேற்கொள்ளும் முன்னர் பயண திட்டங்களை சரியாக வகுக்க வேண்டும். இப்பொது குழந்தைகளுடன் போகிறீர்கள் என்றால், நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பது பற்றிய காலநிலை, உணவு மற்றும் பானங்கள், மின்சாரம், நீர் தேவை, பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற முழுமையான தகவல் உங்களிடம் இருந்தால் நல்லது. இதற்கு இணைய தளம் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறலாம்.
குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை அறிந்து அதற்கேற்ப பேக் செய்யுங்கள்.
பயணத்தின் போது உங்களிடம் குறைந்த லக்கேஜ் இருந்தால், நீங்கள் பயணம் செய்வது எளிதாக இருக்கும். எனவே முடிந்தவரை ஸ்மார்ட் பேக்கிங் செய்யுங்கள். அனைத்து முக்கியமான பொருட்களையும் ஒன்றாக வைக்க முயற்சி செய்யுங்கள். ஆனால் அதிகமாக பேக்கிங் செய்வதைத் தவிர்க்கவும். பயணத்தின் போது குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு கூடுதல் ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள். குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், பொம்மைகள் போன்றவற்றை கைவசம் வைத்திருங்கள். பொம்மைகள் எல்லாம் சின்னதாக அதே நேரம் விளையாட்டு காட்ட ஏற்றதாக எடுத்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளோடு பயணம் செய்யும் போது குழந்தைகளை தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும். அவர் பின்னால் ஓட வேண்டி இருக்கும். அதனால் நீங்கள் பயணம் செய்யும் போது ஹீல்ஸ் அல்லது ஸ்டைலான காலணிகளுக்கு பதிலாக ஸ்போட்ஸ் ஷூ, அல்லது தட்டையான பக்கிள்ஸ் வைத்த காலணிகளை அணிந்தால் அது உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
ஹோட்டலை முன்பதிவு செய்யும் போது, அதன் மதிப்புரைகளைப் படிக்கவும் அல்லது முடிந்தால், அதன் புகைப்படங்களையும், ரிவ்யூக்களையும் பாருங்கள். ஹோட்டல் அல்லது அறை குழந்தைகளுக்கு ஏற்றதா எனப் பார்த்து பின்னர் முன்பதிவு செய்யவும்.
குழந்தைகளுக்கான பொருட்களை எல்லாம் பையின் மேல்புறத்திலேயே வையுங்கள். குழந்தை அழும்போது அதற்கு தேவையானதை பையைக் கொட்டித் தேட முடியாது. எனவே கொஞ்சம் தனி தனி ஜிப்புகள் இருக்கும் பையை பயன்படுத்தி பொருட்களை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இது எளிமையாக எடுக்க உதவுவதோடு பொருட்கள் கலந்து விடாமல் இருக்கும்.
குழந்தைகளுக்கு பசி எப்போது வரும் என்று தெரியாது அதனால் பயணிக்கும் போது தேவையான பால் மற்றும் எளிமையான உணவுகளை கையில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பால் கிடைக்காத இடங்களில் பயன்படுத்த பால் பவுடர், குழந்தைகளுக்கு பிடித்தமான பழங்கள் சிலவற்றை பையில் வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment