வெயில் காலம் வந்துவிட்டால் சின்ன பறவை முதல் மனிதர்கள் வரை எல்லாருக்கும் தண்ணீர் என்பது எப்போதும் தேவைப்படும் ஒன்றாக மாறி விடுகிறது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் எப்போது கிடைக்கும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும். இப்படியான நேரத்தில் ஒரு அருவியைக் கண்டாலே காகங்கள் அலறுகின்ற விசயம் உங்களுக்குத் தெரியுமா ?
ஆமாங்க, அந்த அருவிக்கு மேல காகம் பறக்கவே பயந்து நடுங்குதுன்னா பாருங்களேன். இதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் விட்ட சாபமே என்கின்றனர் சிலர். சரி அந்த அருவி எங்க இருக்கு, என்னவென்ன மர்மங்களையெல்லாம் கொண்டுள்ளது என்று தெரிந்துகொள்வோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்து கெடகானூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றால் இயற்கை எழில் நிறைந்த அங்குத்தி அருவி பொங்கி வழிகிறது. வெயில் காலத்தில் பொதுவாக ஏரி, குளம், சுனை எல்லாம் வைத்தும் நேரத்தில் கூட வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் பரவியுள்ள ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அங்குத்தி சுனை வற்றுவதில்லை.
பூமியில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வரும் இடத்தை தான் சுனை என்று கூறுவோம். அப்படி தண்ணீர் ஊறும் 5 நீர் நிலைகள் இங்கு உள்ளது. இங்கு பஞ்ச பாண்டவர்கள் சிறிது காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே ஐந்து நீர்வீழ்ச்சிக்கு பாண்டவர்களின் பெயர்களான தர்மன், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த 5 அருவிகளில் ஒன்றான பீமன் அருவியில்தான் பீமன் வனவாசத்தின்போது முட்டி போட்டு தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது.அதே போல பாண்டவர்களின் தாயான குந்தி, மோர் கடைந்த இடமும் இந்த அருவியின் அருகேயே உள்ளது என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். பாண்டவர்களின் பாதம், அருவியின் மேல் உள்ள பாறையில் உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் இங்குள்ள பாறையின் மீது ஒரு பெரிய பாம்பின் படிமம் உள்ளது. புறநா கதைகளின் படி ஒரு நாள் பாண்டவர்கள் ஐவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அவர்களைக் கொல்ல பெரிய பாம்பு வந்தது. தூக்கத்தில் ஐவரும் பாம்பின் மீது புரண்டதால் பாம்பின் வடிவம் பாறையில் பதிந்துள்ளது என்று கூறுகின்றனர். இதன் உண்மை தன்மை எந்த அளவு என்று தெரியாது.
சரி முதலில் சொன்ன காகத்தின் கதைக்கு வருவோம். ஒரு முறை பாண்டவர்களில் ஒருவரான பீமன் தவத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது பூணூலை காகம் ஒன்று தீண்ட முயன்றுள்ளது. தவம் கலைந்த பீமன், காக்கைக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் காரணத்தினாலேயே அங்குத்தி அருவி மீது காகம் பறக்கவும், அருவி நீரை குடிக்கவும் அஞ்சுகிறது என்கிறார்கள்.
கிருஷ்ணகிரியில் இருந்து மதூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை வழியாக சுமார் 61 கிலோ மீட்டர் பயணித்தால் அங்குத்தி அருவியை அடையலாம். ஊத்தங்கரையில் இருந்து மாரம்பட்டி, கோவிந்தாபுரம், கெடகானூர் சென்று காட்டு வழியில் நடந்து சென்றால் அங்குத்தி அருவியை அடையலாம். அருவி மட்டும் அல்லாமல், இங்கே 1000 ஆண்டுகள் பழமையான ஒரு திரௌபதி அம்மன் கோவிலும் உள்ளது.
ஜவ்வாது மலையில் மூலிகை மரங்கள் இடையே ஊடுருவி வரும் இந்த நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. அதோடு கோடையிலும் வற்றாமல் ஓடும் இந்த அறிவிக்கும் சுனைக்கும் ஆண்டு முழுவதும் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பாறைகள் மெது தண்ணீர் படந்துகொண்டே இருப்பதால் பாசம் பிடித்து இருக்கும். நடக்கும்போது கவனம் தேவை.இங்கே வரும் பார்வையாளர்களிடம் ரூ.30 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழக வனத் துறையும் இந்த இடத்திற்கு ரூ.300 ஒரு நாள் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. அதில் ட்ரெக்கிங், பறவைகளைப் பார்ப்பது, நீர்வீழ்ச்சியில் குளிப்பது ஆகியவை அடங்கும். அந்த பேக்கேஜைப் பெற https://www.forests.tn.gov.in/pages/view/anguthai-jonal-fals இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்.
கோடை விடுமுறையில் வர இறுதி சுற்றுலாவிற்கு குழந்தைகளை அழைத்துச்செல்ல ஏற்ற இடமாக இது நிச்சயம் இருக்கும். சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவிக்கு செல்ல 5 மணி நேரம் ஆகும். அதற்கு ஏற்றார்போல் உங்கள் பயண திட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment