பன்னீர் மற்றும் போன்லெஸ் சிக்கன் ஆகிய இரண்டையும் 65 செய்து அருகருகே வைத்துவிட்டு, சற்று தொலைவில் இருந்து பார்த்தால் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. துண்டு, துண்டுகளாக வெட்டி சமைத்து விட்டால் இரண்டுக்குமான உருவ ஒற்றுமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், பன்னீர் சைவ உணவு பிரியர்களின் விருப்பத்திற்குரிய உணவு. அதேபோல அசைவ உணவுப் பிரியர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக சிக்கன் உள்ளது.
தோற்றத்தில் ஒன்றுபோல இருந்தாலும் பன்னீர் மற்றும் சிக்கன் இடையே சுவை, மனம் உள்பட பல வகைகளில் வேறுபாடு உண்டு. பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இதில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் தன்மை உண்டு. ஆஸ்த்துமா, இருமல், சளி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பன்னீர் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சைவ பிரியர் என்றால் இது ஒன்றுதான் உங்களுக்கு சிறப்பான தேர்வு.
மெல்லிய இறைச்சியாக கருதப்படும் சிக்கனில் அமினோ அமிலங்கள் நிறைய இருக்கின்றன. சிக்கன் சாப்பிட்டால் நமது எலும்பு மற்றும் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் அசைவ பிரியர் என்றால் பன்னீர் அல்லது சிக்கன் எது சிறப்பானது என்ற குழப்பம் உங்களுக்கு வரக் கூடும்.
புரதச்சத்து : உங்களுக்கு மிகுதியான புரதச்சத்து தேவைப்படும் பட்சத்தில் சிக்கனைத் தான் தேர்வு செய்ய வேண்டும். சிக்கன் சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். அதே சமயம், பன்னீரிலும் புரதச்சத்து குறைவில்லாமல் இருக்கிறது. 100 கிராம் அளவு சிக்கனில் 31 கிராம் புரதமும், 100 கிராம் அளவு பன்னீரில் 20 கிராம் அளவு புரதமும் இருக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் : சிக்கனில் விட்டமின் பி12, நியசின், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. பன்னீரில் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்துடன் ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கவும் கால்சியம் அவசியம். இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்ள கால்சியம் உதவுகிறது.
கலோரிகள் : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு சிக்கன் நல்ல தேர்வாக அமையும். 100 கிராம் அளவு சிக்கனில் 165 கலோரிகள் உள்ளன. ஆனால், 100 கிராம் அளவு பன்னீர் எடுத்துக் கொண்டால் அதில் 265 கலோரிகள் முதல் 320 கலோரிகள் வரை உள்ளன.
எது சிறப்பானது? ஃப்ரீசரில் வைத்த சிக்கனை வாங்கக் கூடாது. நீங்கள் வாங்கும் சிக்கன் அப்போது ஃபிரெஷ்ஷாக நறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் ஆண்டிபயாடிக் இல்லா சிக்கனை தேர்வு செய்ய வேண்டும். அதுவே பன்னீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம். உடனடி ருசிகர சமையலுக்கு பன்னீர் உதவியாக இருக்கும்.
எது ஆரோக்கியமானது? புரதச்சத்தை பொருத்தவரையில் இரண்டுமே நல்ல தேர்வு தான். கொழுப்பு குறைந்த உணவை தேர்வு செய்ய விரும்பினால் சிக்கனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். அதேசமயம், இரண்டு உணவுகளுமே உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும் மற்றும் பசியை கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment