Search

குறிப்பிட்ட நபரை அனைவருக்கும் பிடிக்க என்ன காரணம் தெரியுமா..? இந்த குணங்கள் இருப்பதுதான்..!

 மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு மரியாதை ஏற்பட்டு விட்டாலே அதன் பிறகு அவர்கள் உங்களை பார்க்கும்போதெல்லாம் ஒரு உயர்ந்த மனிதராகவும் நேர்மறை எண்ணம் கொண்டவராகவுமே பார்ப்பார்கள். மேலும் உங்களது பழக்கவழக்கங்களின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் சமுதாயத்தில் ஒரு முன்மாதிரியாகவும் நீங்கள் திகழ்வீர்கள்.. பெரும்பாலும் இப்படி சமுதாயத்தால் மிகவும் மதிக்கப்படும் மனிதர்கள் பலருமே பொதுவான சில உயரிய குணங்களைக் கொண்டுள்ளனர். இரக்கத்தன்மை, பொறுமை, அமைதி போன்றவை இவர்களிடம் இயற்கையாகவே காணப்படும்.

மேலும் தனக்கு மட்டும் நன்மை தரக்கூடிய விஷயங்களை செய்யாமல் தம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மையை தரும் வகையில் முடிவுகளை எடுப்பார்கள். இயற்கையாகவே இவர்கள் தலைமை பண்பை கொண்டவராகவும் தன்னை சுற்றி இருக்கும் நபர்களை மிக எளிதாக கட்டுப்படுத்தும் பண்பையும் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இது போன்ற மதிப்பு மிக்க மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் சில பகுதிகளை பற்றி போது பார்ப்போம்.

கவனித்தல் : இவர்கள் பெரும்பாலுமே அதிகம் பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பதை விரும்புவார்கள். மனதை அலைபாய விட்டுக் கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் மனதை வைத்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். மேலும் மற்றவர்கள் பேசும் போது குறுக்கே பேசாமல் முழுவதுமாக அவர்களை பேச விட்டு அதன் பிறகு தன்னுடைய பதிலை கூறுவார்கள்.

அனுதாபிகளாக இருப்பார்கள் : இவர்கள் பெரும்பாலுமே அனுதாபிகளாகவே இருப்பார்கள். மற்றவர்களின் கோணத்திலிருந்து அவர்களது பிரச்சினையை பார்த்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். அதே சமயத்தில் இரக்க குணம் கொண்டவராகவும், மற்றவர்களை அன்போடு நடத்துவதற்கும் அதிகம் விரும்புவார்கள். இதனால்தான் இவர்களுக்கு மற்றவர்களிடம் அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

பணிவு : இவர்கள் எப்போதுமே மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்கள். வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தான் மற்றொருவர்களை விட உயர்ந்தவர் என்ற தலைகனத்தைக் கொண்டிருக்காமல், எப்போதுமே ஒரே விதமாகவே நடந்து கொள்வார்கள். மேலும் மற்றவர்களிடமிருந்தும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். தனக்கு அனைத்தும் தெரியும் என்ற எண்ணம் கொண்டிருக்காமல் தனக்கு ஏதேனும் தெரியவில்லை எனில் அதனை ஒப்புக் கொள்வார்கள்.

நம்பகத்தன்மை : இவர்களிடம் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். இவர்களை சுற்றியுள்ள நபர்கள் பலருமே இவர்களை சார்ந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு மற்றவரை பாதுகாப்பாகவும் உணர வைப்பதுடன் நம்பகத்தன்மை மிக்கவராக இருப்பார்கள். ஒருவருக்கு சத்தியம் செய்தால் அதனை காப்பாற்றுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். மேலும் எப்போதுமே அனைவருக்கும் உதவ தயாராக இருப்பார்கள்.

மரியாதையான பேச்சு : இவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதும், பேசும் போதும் எப்போதும் மரியாதையுடனே இருப்பார்கள். மிகவும் பணிவாகவும் மற்றவர்கள் விரும்பும் வகையிலும் இவர்களது பேச்சு இருக்கும். மேலும் உடன் இருப்பவரின் கருத்தை நிராகரிக்கும் போதும் கூட அவர்கள் மனம் புண்படாதபடி நிராகரிப்பார்கள்.


0 Comments:

Post a Comment