படித்து முடித்துவிட்டு பிளேஸ்மென்ட் ஆகி தனியார் நிறுவனங்களில் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கினாலும் சமீப காலங்களில் பிரபல நிறுவனங்கள் செய்து வரும் லே ஆஃப்களை பார்த்துவிட்டு இளைஞர்கள் பட்டாளம் முழுவதும் அரசு வேலைகளை நோக்கி படை எடுக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் எப்படி தயாராவது என்ற தெளிவு இருப்பதில்லை.
எனவே, போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்த சில பயனுள்ள குறிப்புகள் இங்கே கொடுக்கிறோம்.
குழு படிப்பு:
பொதுவாக இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மக்கள் செய்யும் முதல் தவறு தனியாக படிப்பது. இது எப்படி தவறாகும் தனியாக படித்தால் தானே நன்றாக படிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் குழுவாக படிப்பது குறைந்த நேரத்தில் நிறைய படிக்கச் உதவும்.
குழு விவாதங்கள் நிகழ்த்தும்போது, தனித்தனியாக படித்ததை மற்றவர்களுக்கு சொல்லும்போது அந்த செய்தி உங்களுக்கு இன்னும் தெளிவாகவும் ஆழமாகவும் மனதில் பதியும். அதே நேரம் எல்லா விஷயங்களையும் தனியாக நீங்களே படிக்கும் போது எடுக்கும் காலத்தை விட மற்றவர்கள் சொல்லி கேட்கும் போது சீக்கிரம் முடிந்துவிடும். கேள்விச் செல்வம் பெருஞ்செல்வம்.
அதே போல நேர்காணல்களில் தைரியமாக பேசுவதற்கான பயிற்சியாகவும் இது அமையும். நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவைப் பற்றி சகாக்களுடன்இப்படி விவாதிப்பது உங்களுக்கு அந்த செய்தி குறித்த பார்வையை விரிவுபடுத்தவும் உதவும்.
திட்டமிடல்:
ஒரு நல்ல திட்டம் கொண்ட ஆரம்பம் பாதி வேலை முடிந்ததற்கு சமம் என்று சொல்வார்கள் . நீங்கள் முயற்சிக்கும் தேர்வுகளின் அட்டவணையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் படிப்பைத் தொடங்கும் நாளில் இருந்து தேர்வு நாளைக் கணக்கிட்டு அதற்கேற்ற சரியான திட்டத்தை உருவாக்கவும். உங்கள் திட்டம் குறைந்தது தேர்வுக்கு 10நாள் முன்னர் முடிவதாக இருக்க வேண்டும்.
நேர மேலாண்மை:
வெற்றியை அடைய உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது முக்கியம். உங்கள் அன்றாட வழக்கத்தில் குழப்பம் மற்றும் கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதற்காக, படிப்பு தாண்டி, பொழுதுபோக்கு, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகளுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் படிப்பை கவனச்சிதறல் இல்லாமல் சிறந்த முறையில் பயன்படுத்த உதவும்.
பாடங்களை சரியாக தேர்ந்தெடுத்து படியுங்கள்:
சில தேர்வுகளில் விருப்பப்படங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் அதிகம் படிக்கும் படம் என்று தேர்ந்தெடுக்காமல் உங்களுக்கு மிகவும் வசதியாக, எளிமையாக இருக்கும் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். பல மாணவர்கள் வெற்றியை அடைவதற்கு இது ஒரு முக்கியமான புள்ளியாக இருந்துள்ளது.
பகுதி பிரித்தல்:
கடைசி நிமிடம் வரை படிப்பது, எல்லாவற்றையும் படிப்பது இரண்டுமே மன அழுத்தம் மற்றும் சோர்வு மற்றும் குழப்பத்திற்கு வழிவகுக்கும். உங்கள் படிப்புத் திட்டத்தை உருவாக்கும் முன், தேர்வுப் பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பிரிவிலும் உங்களுக்கு எளிமையாக இருக்கும் பகுதி கஷ்டமான பகுதி என்று பிரித்துக்கொள்ளுங்கள். சில கஷ்டமான பாட பகுதி, அதிக மதிப்பெண் எடுக்க கூடியதாக இருக்கும். அதற்கு தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படியுங்கள்.
மாதிரி தேர்வுகள்:
எவ்வளவு படித்தாலும் கேள்வி தாள் கையில் கொடுத்ததும் எதுவும் நினைவுக்கு வருவதில்லை என்பது தான் எல்லாம் பொதுவாக சொல்லும் விஷயம். அதற்கு காரணம் நீங்கள் கேள்விகளுக்கு பழக்கப்படவில்லை என்பது தான். தேர்வுக்கு ஒரு நாளில் 6 நாட்கள் படித்தால் 7 ஆவது நாள் படித்த படங்கள் கொண்ட முந்தைய ஆண்டு மாதிரி தாள்களைப் பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக அதன் விடைகளை சரிபார்த்து என்ன தவறு செய்தோம் என்பதை அறிய வேண்டும். அப்போது தான் முழு பலன் கிடைக்கும். அதோடு இந்த மாதிரி தேர்வுகள் அசல் தேர்வில் உங்கள் நேர மேலாண்மைக்கும் உதவும்.
சுய உந்துதல்:
எதோ வினோத வார்த்தை என்று பார்க்க வேண்டாம். self motivation என்பதை தான் அப்படி சொன்னோம். என்ன ஆனாலும் உங்கள் சுய ஆர்வமும், உந்துதலும் இருந்தால் மட்டுமே உங்களால் சரியாக தேர்வுக்கு தயாராக முடியும். வெற்றிபெறவும் முடியும். உந்துதல் தான் எப்போதும் இலக்குகளை அடைய உங்களை ஊக்குவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுய உந்துதலோடு படிக்க ஆரம்பியுங்கள்.. மீண்டும் சந்திப்போம்..
Click here for latest employment news
No comments:
Post a Comment