குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை. பிறந்தது முதல் சில மாதங்கள் வரை குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமே பெரிதாக கருத்தில் கொள்ளப்படும். வளர வளர, குழந்தைகளின் நடவடிக்கை, அவர்கள் குணம், திறன்கள் ஆகியவை மீது கூடுதல் கவனம் தேவைப்படும். குழந்தை வளர்ப்பது எப்படி என்பது பற்றி மகப்பேறு மருத்துவர்கள், உளவியலாளர்கள், குழந்தை வளர்ப்பு நிபுணர்கள் பல்வேறு முக்கியமான விஷயங்களை வலியுறுத்தி வருகின்றனர். இவற்றில், புத்த மதம் குழந்தைகள் வளர்ப்பில் எதுவெல்லாம் முக்கியம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி பல விஷயங்களை வலியுறுத்துகிறது.
பெற்றோர் தான் குழந்தைகளின் கண்ணாடி
பெரும்பாலும், பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ, என்ன செய்கிறார்களோ அதையே தான் குழந்தைகளும் செய்வார்கள். குழந்தைகள் தான் என்ன பார்க்கிறதோ, கேட்கிறதோ, எவ்வாறு உணர்கிறதோ அதையே பிரதிபலிக்கும். எனவே, பெற்றோர்கள் பேசும் வார்த்தைகள், அவர்கள் நடந்து கொள்ளும் விதம் என்று அனைத்துமே குழந்தைகள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அன்பை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடாது
குழந்தைகள் மீது நீங்கள் எவ்வளவு பிரியம் வைத்துள்ளீர்கள் என்பதை அவர்களிடம் பல விதங்களில் வெளிப்படுத்த வேண்டும். வளர்ந்தவர்களுக்கே நீங்கள் ஒருவர் மீது அன்பாக இருக்கிறீர்களா இல்லையா என்பது வெளிப்படையாக சொன்னால் தவிர தெரியாது. அதனால், குழந்தைகளிடம் அவர்கள் மீதுள்ள அன்பை வார்த்தைகளால், செயல்களால் வெளிப்படுத்த வேண்டும்.
உங்களால் எதை செய்ய முடியுமோ அதை மட்டும் கூறுங்கள்
எல்லா பெற்றோருக்குமே தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும்படியான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும், குழந்தைகள் கேட்பது எல்லாம் வாங்கி தர வேண்டும், குழந்தைகள் பிடித்ததையெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு பெற்றோராக உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் செய்வதாக உறுதியளிக்கக்கூடாது.
உதாரணமாக நீங்கள் வெளியே கூட்டி செல்கிறீர்கள், ஏதேனும் ஒரு பொருள் வாங்கி தருகிறீர்கள், அல்லது குழந்தைகளுடன் நேரம் செலவழித்து விளையாடலாம் என்று கூறிவிட்டு அதை நீங்கள் செய்யவில்லை என்றால் அது உங்கள் ஃபால்ஸ் ப்ராமிஸ், அதாவது போலி கொடுத்ததாக ஆகிறது. எதையேனும் செய்வதாக சொல்லிவிட்டு, அதை செய்யவில்லை என்றால் உங்கள் மீது குழந்தைகளுக்கு அவநம்பிக்கை ஏற்படும். குழந்தைகள் மனதில் நீங்கள் நேர்மையற்றவர் என்று பதிய செய்யும்.
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்
ஒடுக்கமாக கட்டுப்பாட்டுடன் குழந்தைகள் வளரும் பொழுது, அவர்கள் டீன் ஏஜ் மற்றும் அடல்ட் ஆன பிறகு எல்லாவற்றிற்கும் எதிராக ஏதேனும் செய்து கொண்டிருப்பார்கள்; யார் எதை சொன்னாலும் அதை கேட்காமல் ‘ரிபல்’ போல இருப்பார்கள். எனவே குழந்தைகளை வளர வளர அவர்கள் விருப்பத்தின்படி பல விஷயங்களை நீங்கள் விட்டுவிட வேண்டும். குழந்தைகள் ஏதேனும் தவறாக செய்யும் பட்சத்தில் மட்டும் தவறு செய்வதை சுட்டிக்காட்டினால் போதும்.
குழந்தைகளை கிண்டல் செய்யக்கூடாது
கிண்டல், கேலி செய்வது அல்லது நையாண்டி நக்கல் செய்வது என்பது மிகவும் தவறான செயல். கிண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள் பெரிய அளவுக்கு மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். பெற்றோர்களின் அல்லது பெரியவர்களின் கண்ணோட்டத்தில் ஒரு நகைச்சுவையாக தெரியும் ஒரு விஷயம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அவமானத்தை உணரச் செய்யும். எனவே குழந்தைகளை எப்பொழுதுமே கிண்டல் செய்யக்கூடாது.
குழந்தைக்கு மரியாதை அளிக்கவும்
அந்தந்த வயதுக்கு உரிய மரியாதை என்று வரும் பொழுது குழந்தைகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு மரியாதை அளிப்பது எப்படி என்று யோசிக்கலாம். அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்களுக்கு எது பிடிக்கவில்லை என்று காது கொடுத்து கேட்பது கூட அவர்களுக்கு அளிக்கும் மரியாதைதான். சிறு குழந்தை தானே குழந்தை சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
எப்போதுமே பெற்றோராக புதிது புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்
பெற்றோராக உங்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் கிடைத்தாலும், உங்களுக்கு அனுபவங்கள் இருந்தாலும், குழந்தை வளர்ப்பில் புதிதாக ஏதோ ஒரு விஷயத்தை நீங்கள் அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள். எனவே பெற்றோராக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பது உணர வேண்டும்.
குழந்தைகளுக்கான சுதந்திரம்
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை இப்படித்தான் வளர வேண்டும், இதைத்தான் சாப்பிட வேண்டும், இது மட்டும் தான் செய்ய வேண்டும் என்று பலவிதமான வரையறைகளை உருவாக்கியுள்ளனர். இருப்பினும் குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய சுதந்திரத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும். உங்கள் எல்லா விருப்பத்தையும் குழந்தைகள் மீது திணிக்க கூடாது.
No comments:
Post a Comment