உதகை: குன்னூர் இண்ட்கோ சர்வ் மூலமாக ஊக்கத்தொகையுடன் தேயிலை துறை சார்ந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் உலக வங்கி இணைந்து செயல்படுத்தும் ‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தை, தமிழகத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேயிலை துறை சார்ந்து பயிற்சி அளிக்க,இண்ட்கோ சர்வ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இண்ட்கோசர்வ் மூலமாக தேயிலை தயாரிப்பாளர் (20 இடங்கள்), தேயிலை தொழிற்சாலை உதவியாளர் (20 இடங்கள்) பயிற்சிகளை ஊக்கத்தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சியாக அளிக்க உள்ளது.
ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு, விதிமுறைகளின் படி ஒதுக்கீடு உண்டு. அடிப்படைத் தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான காலம் ஒரு வருடம். தொழிற்பழகுநர் பயிற்சிவிதிகள்படி, பயிற்சி காலத்தில்கல்வித் தகுதிக்கேற்ப மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழிற்பழகுநர்களுக்கு காப்பீட்டு வசதியும் உண்டு.
தேயிலைத் தோட்டம், ரகங்கள்,உரங்கள், இயந்திரங்கள், தயாரிக்கும் முறை, ஏல மையங்கள் உள்ளிட்ட அனைத்தும், தொடர்புடைய நிபுணர்களால் கற்றுத்தரப்பட உள்ளன. பயிற்சி நிறைவில், மத்திய அரசின் அக்ரிகல்சர்ஸ் ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியா மூலமாக சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை இண்ட்கோ சர்வின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் 16 இண்ட்கோ தொழிற்சாலைகளிலும், இண்ட்கோ சர்விலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இண்ட்கோ சர்வின் இணையதளத்தில் இருந்துபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு குன்னூரில் உள்ள இண்ட்கோ சர்வ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment