பொதுவாக ஒருவரின் வாழ்வில் அன்றாடம் கடைபிடிக்க கூடிய பழக்க வழக்கங்கள் தான் அந்த மனிதரை ஆரோக்கியமானவராக வைத்து கொள்ளும். மோசமான பழக்க வழக்கங்கள் உடலுக்கு கேடு விளைக்க கூடியதாக அமையும். அந்த வகையில், தினசரி செயல்பாடுகள், நடைமுறைகள், நேர அட்டவணைகள் ஒருவருக்கு மிகவும் முக்கியமானவை.
யாராக இருந்தாலும், ஒரு கால அட்டவணையை கொண்டு தினசரி தனது பழக்க வழக்கங்களை சீராக செய்து வருவது எண்ணற்ற நன்மைகளை தரும். ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது தினசரி நடவடிக்கைகள் என்பது சீரற்ற முறையில் உள்ளன. எனினும் இரவு நேரத்தில் நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமது அடுத்த நாளை சிறப்பாக கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தூக்கம் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். நாம் படுக்கைக்குச் செல்வதற்கு எப்படித் தயாராகிறோம் என்பதும் நமது வாழ்க்கை முறையைப் பற்றி நிறைய சொல்கிறது. ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு, நீங்கள் சில விஷயங்களைப் பயிற்சி செய்ய வேண்டியது முக்கியம். தரமான இரவு தூக்கம் இல்லாமல் போவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்த கூடும். குறிப்பாக நம்மில் பெரும்பாலோர் அதிக நேரம் உட்கார்ந்து இருக்க கூடிய வாழ்க்கை முறையை கொண்டிருப்பதால், தூக்கமின்மை என்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே ஆரோக்கியமான இரவு நேர வழக்கத்தை உருவாக்குவது சுய பாதுகாப்பு மட்டுமல்லாமல், இது சிறந்த ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது. இரவு நேரத்தில் அவசியம் பின்பற்ற வேண்டிய 4 பழக்க வழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் : பொதுவாக கணினி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்கள் அனைத்தும் வலுவான நீல ஒளியை வெளியிடுகின்றன. எனவே, இந்த டிவைஸ்களை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தும் போது, அந்த நீல ஒளி உங்கள் மூளையை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லாமல் தடுக்க கூடும். மேலும், இது இரவு நேரத்தை கூட உங்கள் மூளையை பகல்நேரம் என்று நினைக்க வைக்கிறது. இதன் விளைவாக, உங்கள் மூளை மெலடோனின் உற்பத்தியை தடுக்குகிறது மற்றும் இரவு நேர தூக்கத்தை வரவிடாமல் உங்களை கண் விழிக்க வைக்கிறது.
ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள்: காலை நேரத்தில் முதலில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் ஹார்மோன் சமநிலையை சமாளிக்க மிகவும் உதவுகிறது. மேலும், இது உங்களின் எடையை குறைக்கவும், சர்க்கரை அளவை சீராக வைக்கவும் வழி செய்கிறது. இந்த பழக்க வழக்கத்தை கொண்டு வர இரவு நேரத்தில் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றில் கார்போஹைட்ரேட் இல்லாததால், ரத்த குளுக்கோஸ் அளவும் அதிகரிக்காமல் இருக்கும். கூடுதலாக, இது இன்சுலின் ரெசிஸ்டென்ஸையும் மேம்படுத்துகிறது.
பட்டியலை எழுதுங்கள்: எப்போதும் அடுத்த நாளை தொடங்கும் முன்னர், முதல் நாள் இரவே செய்ய வேண்டிய பட்டியலை உருவாக்குவது, நாளைய பணிகளை பற்றி நினைத்து நம் மனம் கவலைப்படுவதைத் தடுக்கிறது. நீங்கள் காலையில் எழுந்ததும், அடுத்த நாளைத் தொடங்க ஒரு பயணத் திட்டம் தயாராக இருந்தால், அனைத்தும் சரியாக நடக்கும். ஒவ்வொரு மாலையும் 15 - 30 நிமிடங்கள் ஒதுக்கி, அடுத்த நாளுக்காக தயாராகுங்கள். இவ்வாறு செய்து வந்தால், காலை நேரத்தில் பரபரப்பாக இல்லாமல், நிதானமாக வேலைகளை செய்து முடிக்கலாம். மேலும், இது நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது மன அமைதியை மேம்படுத்தவும் உதவும்.
மன அழுத்தத்தைத் தணிக்கவும்: நாள் முழுவதும் ஓடி களைத்து போயிருக்கும் உங்களது மனதை சோர்வில் இருந்து காக்க உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்து வரவும். அது தியானம், மூச்சு பயிற்சிகள், புத்தகம் படிப்பது, லைட் மியூசிக் கேட்பது அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை மனதையும் உடலையும் நிம்மதியாக வைப்பதுடன், பதற்றத்தை நீக்கி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன. மேலும், அடுத்த நாள் காலையில் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் எழுந்து, உங்களது வேலைகளை திறம்பட செய்ய உதவும்.
No comments:
Post a Comment