ஒரு மாதத்தில் எத்தனை கிலோ வரை எடை குறைப்பது நார்மல்? சிலர் 5 கிலோ, 10 கிலோ குறைப்பதாகச் சொல்கிறார்களே...
அது ஆரோக்கியமானதா? அது சாத்தியமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஷீபா தேவராஜ்
ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு கிலோவில் இருந்து அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவது நார்மலானது. அதைத் தாண்டுவது நல்லதல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ குறைவதெல்லாம் ஆரோக்கியக்கேடான விஷயம்தான்.
அப்படி ஒருவர் அதீதமாக எடை குறைகிறார் என்றால் அவர் மிகக் குறைந்த அளவே சாப்பிடுகிறார் அல்லது எந்தவிதச் சத்துகளும் இல்லாமல் சாப்பிடுகிறார் என்றே அர்த்தம்.
வெறித்தனமாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இப்படி உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்கும் எத்தனையோ பேரை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். வெறும் நட்ஸ் மட்டும் சாப்பிடுவது, காய்கறி ஜூஸ் குடிப்பது என தீவிரமாக இருந்து 5 கிலோ, 10 கிலோவெல்லாம் எடையைக் குறைப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது. இப்படிச் செய்வதால், அதே வேகத்தில் எடை மீண்டும் கூடும் அபாயமும் இருக்கிறது.
எனவே எடைக்குறைப்பு முயற்சி என்பது மெதுவாக இலக்கை அடைவதாக இருந்தாலும் பரவாயில்லை என்ற தெளிவுக்கு வர வேண்டும். 21 நாள் சேலன்ஜ் என்ற பெயரில் நான் உட்பட ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் பலரும் எடைக்குறைப்புக்கான பயிற்சிகளை வழங்குகிறோம். அதில் அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவதையே அனுமதிப்போம்.
ஆரோக்கியமான எடைக்குறைப்பில் ஆரோக்கியமான, சுத்தமான உணவுப்பழக்கம்தான் பிரதானமாக இருக்கும். உணவுப்பழக்கத்துடன் கூடவே உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்கிறபோது தசை இழப்பு ஏற்படாது. சருமத்தில் தொய்வும் ஏற்படாது.
சரியாக உடற்பயிற்சி செய்யாதது, மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் பெரு நுண்ணூட்டச் சத்துகள் இல்லாமல் சாப்பிடுவது போன்றவற்றால் சருமம் தொய்வடையும். உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தும்போது இந்தப் பிரச்னை வராது. தழும்புகள் வராது. எனவே சரியான வழிகாட்டுதலுடன் எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்குங்கள்.
0 Comments:
Post a Comment