நடைபயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த நடைப்பயிற்சியானது பல வகையில் ஆரோக்கியத்தை தருகிறது. அதே போன்று, உடல் பருமன் அதிகமாக இருப்போருக்கும் இது சிறப்பாக உதவுகிறது.
மேலும், சர்க்கரை நோய், இதய நோய், மனநல பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கும் நடைபயிற்சி நல்ல தீர்வாக அமைகிறது. பொதுவாக நடைபயிற்சியை காலை நேரத்தில் பயிற்சியாக செய்வது தான் பெரும்பாலோரின் வழக்கமாகும். ஆனால், இதை உங்களது தினசரி செயல்பாடுகளில் சில எளிமையான வழிகள் மூலம் சேர்த்து கொண்டால் பலன் அதிகம்.
அதாவது, உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான 6 எளிய மாற்றங்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
படிக்கட்டுகளில் செல்லுங்கள்: பொதுவாக நம்மில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டர்களில் செல்லும் பழக்கத்தை பின்பற்றி வருகிறோம். ஆனால், இதற்கு பதிலாக, முடிந்தவரை படிக்கட்டுகளில் செல்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு வேலையாக இருந்தாலும் சரி, ஷாப்பிங் மாலில் இருந்தாலும் சரி அல்லது வீட்டில் இருந்தாலும் சரி, படிக்கட்டுகளை அதிகம் பயன்படுத்துவது என்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே போன்று, தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது ஒரு சிறந்த வழி.
இடைவேளையின் போது நடக்கவும்: இன்று அதிக மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காரும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இது பல வகையில் உடல் மற்றும் மனதிற்கு பாதிப்புகளை தரும். எனவே, அவ்வப்போது இடைவேளைகளில் நடக்க செய்வது நல்லது. குறிப்பாக உங்கள் மதிய உணவு இடைவேளை அல்லது காபி இடைவேளையில் உட்கார்ந்திருப்பதை விட, விறுவிறுப்பாக ஒரு ரவுண்ட் நடக்கலாம். இது புதிய காற்றை சுவாசிக்கவும், உங்கள் ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புத்துணர்வு பெறவும் வாய்ப்பாக இருக்கும். இடைவேளையின் போது உங்களுடன் வாக்கிங் வர நண்பர்களையும் துணைக்கு சேர்த்து கொள்ளலாம்.
தொலைவில் நிறுத்துங்கள்: வாகனங்களை நிறுத்துமிடத்தில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, உங்கள் வாகனத்தை வேண்டுமென்றே சற்றுதொலைவில் நிறுத்துங்கள். இந்த எளிய மாற்றம் உங்கள் தினசரி நடையின் அளவை அதிகரிக்க உங்களுக்கு உதவும்.
முன்னதாக இறங்கவும்: நீங்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவராக இருந்தால், சில ஸ்டாப்பிங்கிற்கு முன்னதாகவே இறங்கி, மீதமுள்ள தூரம் நடந்து செல்ல முயற்சிக்கலாம். இந்த உத்தி உங்கள் தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புதிய பகுதிகளை உங்களுக்கு தெரிந்து கொள்ளவும், இயற்கைக்காட்சிகளை அனுபவிக்கவும், நாள் முழுவதும் கூடுதல் உடற்பயிற்சியில் ஈடுபடவும் வழி செய்கிறது.
இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்: நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க கூடிய பணியில் நீங்கள் இருந்தால், அவ்வப்போது சிறு சிறு இடைவேளைகளை எடுத்து கொண்டு நடந்து வரலாம். இதற்கு உங்கள் மொபைலில் ஒரு நினைவூட்டலை வைத்து கொண்டோ, அல்லது டைமரைப் பயன்படுத்தி கொண்டோ ஒவ்வொரு மணி நேரமும் சில நிமிடங்கள் எழுந்து நடப்பதை வழக்கமாகி கொள்ளுங்கள்.
தினசரி நடைகள்: பெடோமீட்டர், ஃபிட்னஸ் டிராக்கர் அல்லது ஸ்மார்ட்போன் ஆகியவற்றின் மூலம் உங்களது தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையைப் பற்றிய தெளிவை பெறுங்கள். இந்தச் சாதனங்கள், இலக்குகளை நிர்ணயிக்கவும், உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், ஒவ்வொரு வாரமும் படிப்படியாக உங்கள் ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மைல்கற்களை அடைய இவை உதவும்.
No comments:
Post a Comment