சென்னை: அடிப்படை கல்வித் தகுதியில் புதிய திருத்தத்துடன் உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இதன்படி, இனிமேல் சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும்.
தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளி்ல் குறிப்பிட்ட விகிதாச்சார பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுகள் நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாவட்ட சுற்றுலா அலுவலர் பதவியில் 3 காலியிடங்களுக்கான தேர்வுஜுன் மாதம் நடத்தப்பட இருக்கிறது.
இதற்கிடையே, உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பதவியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் எனடிஎன்பிஎஸ்சி-யின் 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும்தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு தொடர்ந்து அக்டோபரில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் காலஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு சுற்றுலா தொடர்பான பட்டப் படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலா மேலாண்மையில் டிப்ளமா படிப்பும் அதோடு அரசு கணினி சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சியும் அடிப்படை கல்வித்தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக இருந்தால் அவர்களுக்கு அரசு கணினிசான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு காலஅட்டவணையின்படி, உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மே மாதம் ஆகியும் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது, "உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித் தகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சுற்றுலாத் துறையிடமிருந்து ஒப்புதல் வரப்பெற்றதும் தேர்வுக்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்" என்றார்.
உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித்தகுதி திருத்தம் குறித்து சுற்றுலாத் துறையினரிடம் விசாரித்தபோது, இந்த தேர்வுக்கு பட்டப் படிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்றுதற்போதைய கல்வித் தகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் பட்டப் படிப்பில் தமிழ் ஒரு பாடமாக இல்லை.
நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை கல்வித் தகுதியை பெற்றிருந்தாலும் இந்த விதிமுறை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழல் தற்போது உள்ளது. இதை கருத்தில்கொண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2-வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தால் போதும். பட்டப் படிப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அடிப்படை கல்வித் தகுதியில் திருத்தம் செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தனர்.
கல்வித்தகுதி திருத்தம் தொடர்பாக சுற்றுலாத் துறையிடமிருந்து டிஎன்பிஎஸ்சி-க்கு இன்னும் ஒப்புதல் அனுப்பப்படவில்லை. ஒப்புதல் கிடைத்ததும் உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment