Search

கோடை காலத்தில் அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!

 வெயிலில் அலைந்து திருந்து வீட்டிற்கு வருபவர்கள் உடனே நமது வீட்டு 'ஃப்ரிட்ஜில்' உள்ள குளு-குளு நீரை எடுத்து பருகுவார்கள். இது சமயங்களில் ஆபத்தை உண்டாக்கலாம் என்றும், குடல் அழுகல் ஏற்படும் அபாயமே உள்ளதாகவும் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோடைகாலத்தில் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் கேள்வியெழுப்பினோம்.

அதற்கு பதிலளித்த அவர், கோவையில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 101 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பொதுவாக மக்கள் தேவையில்லாமல் வெளியே போகக்கூடாது. முதியவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் இந்த காலகட்டத்தில் அதிகமாக விளையாடச் செல்வார்கள். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்கள் வெளியே செல்லவதை தவிர்க்க வேண்டும்.


ஜில் என்ற தண்ணீர் குடிப்பது எப்போதுமே தவிர்ப்பது நல்லது. சாதாரண நீரைக் குடிக்கலாம். ஆர்.ஓ நீரில் கூட சத்துக்கள் இருப்பதில்லை என்று கூறப்பட்டு வருகிறது. ஜில் என்ற தண்ணீரை குடித்தால் குளிருக்கு நமது ரத்தக்குழாய் சுருங்கும். குடலுக்கு செல்லும் போது இன்னும் ரத்த ஓட்டம் குறையும் போது குடல் அழுகிப்போவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ரத்த குழாய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், அனைவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படும் என்று கூற முடியாது. எனவே சாதாரண நீரையே பருகலாம்.

வெயிலின் தாக்கத்தால் வியர்வை வெளிப்படும்போது பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு சிலருக்கு சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டிற்கு வந்தவுடன் கைகள், கழுத்து பகுதிகளைக் கழுவ வேண்டும் என கூறினார்.

தளர்வான ஆடைகளை அணியலாம். கருப்பு நிறை உடை அணிவரை தவிர்க்க வேண்டும். வெள்ளை நிற ஆடைகள் அணிவதன் மூலமாக வெயில் தாக்கம் அதிக அளவில் இருக்காது. தினமும் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் பருகாமல் இருந்தால் நமது உடலில் தாது சத்துக்கள் குறையும். அதனால் வளர்சிதை மாற்ற சமநிலையின்மை ஏற்படக்கூடும். வெளியே செல்லும் போது குடையை எடுத்துச் செல்லுங்கள். இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணிந்து செல்லலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment