பொதுவாக இனிப்பு சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்பார்கள். ஆனால் செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிட்டால் அதே பலன் கிடைக்குமா? உலக சுகாதார மையம் தரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன.
இனிப்பு உடல் எடையை கூட்டும், சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இனிப்புக்கான செயற்கை மாற்றாக கொண்டுவரப்பட்டவை தான் artificial sweeteners. இவை பல வகைகளில் கிடைக்கின்றன. மாத்திரைகளாகவும், திரவ வடிவத்திலும், பவுடராகவும் விற்கப்படுகின்றன.
காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க முடியாது என நினைப்பவர்கள் அவற்றுக்கு மாற்றாக இந்த artificial sweeteners-ஐ தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், செயற்கை இனிப்பூட்டிகளின் கலோரிகள் குறைவு என்பதால் சர்க்கரைக்கு பதிலாக இவற்றை விரும்புகின்றனர்.
உலக சுகாதார மையமோ இந்த வகையான இனிப்பூட்டிகள் எந்த வகையிலும் உடல் எடையை குறைக்க உதவாது என கூறுகிறது. தவிர டைப்-2 சர்க்கரை நோய்க்கு இது வழிவகுக்கும் என தெரியவந்துள்ளதாக கூறியிருக்கிறது. அதுமட்டுமல்ல மாரடைப்பு போன்ற இதய நோய்க்கும் இது வழிவகுக்குமாம்.
மேலும் இவற்றில் எந்த வித சத்தும் இல்லை என்பதால், மக்கள் இவற்றை புறகணிப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளது. மேலும் இனிப்பு சுவையை விரும்புவோர் பழங்களிலும் சர்க்கரை உண்டு என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லது என கூறுகிறது.
கிளீவ்லாண்ட் கிளினிக் (Cleveland Clinic) என்னும் நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 4ஆயிரம் பேரிடம் நடத்திய மற்றுமொரு ஆய்வில், அவர்களில் எரித்ரைடோல் என்னும் artificial sweetener பயன்படுத்தியவர்கள் பலர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் அபாயத்திற்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளது.
செயற்கை பொருட்களின் வணிகம் அதிகரித்துவிட்ட சூழலில், இயற்கை கொடையாக கொடுக்கும் உணவு பொருட்களே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவு பழக்கங்களை மேற்கொண்டாலே பல நோய்களிலிருந்து தப்பலாம் என்பதற்கு இது ஒரு சான்று.
No comments:
Post a Comment