பசிக்கு சாப்பிடுவது என்பதையெல்லாம் தாண்டி வாய் ருசிக்கு ஏற்றபடி சாப்பிடும் பழக்கம் இன்று அனேக மக்களுக்கு இருக்கிறது. அலைபாயும் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் பல வகையான ஸ்நாக்ஸ் மற்றும் துரித உணவுகளை வயிறு நிரம்ப சாப்பிடுகின்றனர். இதன் எதிரொலியாக செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ருசியின் தேடலையும் பூர்த்தி செய்ய வேண்டும், அதே சமயம் அது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற தேடல் உங்கள் மனதில் வந்திருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு முளைகட்டிய பயறு வகை ஸ்நாக்ஸ்கள் அனைத்துமே நல்ல சாய்ஸ் ஆக அமையும். அதிலும் முளைகட்டிய கொண்டக்கடலை பயிரானது சத்து மிகுந்ததாக இருக்கும். இதுபோன்ற பயறுகளை ஸ்நாகஸ் ஆக எடுத்துக் கொண்டால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
உடல் எடை குறையும்: ஆமாம், வயிராற சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்குமோ என்ற அச்சம் உங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் கொண்டக்கடலையில் நார்ச்சத்து மிக, மிக அதிகம் மற்றும் கலோரி சத்து குறைவாக இருக்கும். ஆகவே, உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க விரும்பும் நபர்களுக்கு இது சிறப்பான உணவாக அமையும்.
இதயநலனை மேம்படுத்தும்: சிவப்பு கொண்டக்கடலையில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் எண்ணற்ற ஃபைடோ ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் ரத்த நாளங்களின் நலமை மேம்படுத்தும் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கும். இதன் எதிரொலியாக உங்களுக்கு இதய நோய்க்கான அபாயம் குறையும்.
முடி ஆரோக்கியம் மேம்படும்: முளை கட்டிய கொண்டக்கடலையில் அத்தியாவசிய விட்டமின்களான விட்டமின் ஏ, விட்டமின் பி16 மற்றும் ஜிங்க், மேங்கனீஸ் போன்ற தாதுக்கள் போன்றவை நிரம்ப உள்ளன. இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு துணை நிற்பதோடு, முடி வளர்ச்சிக்கும் உதவும்.
சர்க்கரை அளவை சீராக்கும்: கொண்டக்கடலையில் உள்ள காம்ப்ளெக்ஸ் மாவுச்சத்தானது கொஞ்சம் தாமதமாக செரிமானம் அடையும். அதே சமயம், நார்ச்சத்தானது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சும். ஆக, உங்கள் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கப்படுகிறது.
மூளையின் செயல்பாடு மேம்படும்: நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் தன்மை கொண்டக்கடலைக்கு உண்டு. அதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் மற்றும் உங்கள் எண்ண ஓட்டம் மேம்படும். கவனத்திறன் அதிகரிக்கும் என்பதால் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இதை தினசரி மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போல சாப்பிடக் கொடுக்கலாம்.
செரிமானத்திற்கு நல்லது: முளைகட்டிய கொண்டக்கடலையில் கரையத்தக்க நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது செரிமான நடவடிக்கையை மேம்படுத்தும் மற்றும் குடல் நலன் காக்கும். மேலும், சர்க்கரை அளவும் உடனடியாக அதிகரிக்காது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவாக அமையும்.
0 Comments:
Post a Comment