Search

வயது வரம்பு இல்லை... கல்வி தகுதியும் தேவையில்லை... புதிய தொழில் முனைவோர்களுக்கு அசத்தல் வாய்ப்பு

 ஆர்வமுள்ள எஸ்சி/எஸ்டி தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு அரசின், 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்(SC/ST) தொழில்முனைவோர்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யோக சிறப்பு திட்டமாக ’அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ செயல்படுத்தபடவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த அனைத்து வித தொழில் திட்டத்திற்கும் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை மற்றும் கல்வி தகுதியும் தேவையில்லை. மொத்ததிட்ட மதிப்பில் 65% வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளிகளுக்கு தம் பங்காக நிதிசெலுத்தவேண்டிய தேவை இருக்காது. இத்திட்டத்தில் 8% வட்டி மானியமும் வழங்கப்படும்.

மேலும், ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் (SC/ST) பிரிவு  தொழில்முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான அனைத்துவித உதவிகளும் அளிக்கப்படுவதுடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் திட்டம் சார்ந்த சிறப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில்  வருகிற 23.05.2023  (நாளை) அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள எஸ்.சி மற்றும் எஸ்டி (SCIST) பிரிவு தொழில்முனைவோர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற A-30,சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் அமைந்த தொழில் மற்றும் வணிக மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 90030 84476, 94441 14723 ஆகிய எண்களில் தொலைபேசி வழியாகவோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment