குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பது பற்றி அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் . உணவில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை என்றால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை. குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் உடல் எடை கூடுவதை போல் அவர்கள் உயரமும் அதிகரிக்க வேண்டும். 2-10 வயதுக்கு இடையில், குழந்தைகள் சீரான வேகத்தில் வளர்கிறார்கள், ஆனால் குழந்தைகள் வளர வளர உயரமாக ஆவதன் வேகம் குறைகிறது. 15 - 18 வயது வரை வளர்ச்சி என்பது சிறிது குறைவாகவே இருக்கும். பிறந்த குழந்தையின் மாதாந்திர வளர்ச்சியைக் கண்காணிப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல குழந்தைகள் வளர வளர அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதும் அவசியம்.
இப்போதெல்லாம் குழந்தைகள் ஃபாஸ்ட் மற்றும் ஜங்க் ஃபுட்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவை நல்லதல்ல. எனவே குழந்தைகளின் உயரம் அதிகரிக்க உதவும் உணவுகளை உண்பதன் மூலம் அவர்கள் உயரத்திலும் நன்றாக வலர்வார்கள்.
குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும் சில உணவுகள்!
1. பால்
ஏறக்குறைய அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுவதால், பால் ஒரு முழுமையான உணவு என்பதில் சந்தேகமில்லை. இதில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கின்றன, எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுங்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் சீராக அதிகரிக்கிறது.
2. பச்சை இலை காய்கறிகள்
சில குழந்தைகள் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட விரும்ப மாட்டார்கள். மாறாக அவர்கள் எண்ணெய் அல்லது நொறுக்குத் தீனிகளை விரும்புகிறார்கள், ஆனால் இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், பச்சைக் காய்கறிகளை உண்ணும்படி பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்துவது முக்கியம். இதிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும். முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் கீரைகள் ஆகிய பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படும் கால்சியம் குழந்தைகளின் எலும்பு மறு உருவாக்கம், எலும்பு திசுக்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது.
3. பழங்கள்
அனைத்து வயதினரும் பழங்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று நீங்கள் விரும்பினால், இன்றிலிருந்து குழந்தைகளுக்கு பழங்களை ஊட்டத் தொடங்குங்கள். சீசனில் கிடைக்கும் பழங்களை கொடுப்பது மிகவும் சிறந்தது. ஏனேனில் சீசனில் கிடைக்கும் அந்தந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் அதன் ஊட்ட சத்துக்களை முழுமையாக பெறலாம்.
4. முட்டை
முட்டை புரதத்தின் வளமான ஆதாரமாக அறியப்படுகிறது. காலை உணவில் உங்கள் குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டைகளை கொடுக்க வேண்டும். புரதம் தவிர, இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். சூப்பர் புட் என கருதப்படும் முட்டையின் வெள்ளைக் கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களும், மஞ்சள் கருவில் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
5. பருப்பு வகைகள்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள. அவை உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கான உணவுகளில் தினமும் பருப்புகளை சேர்க்க வேண்டும். இது குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும்.
No comments:
Post a Comment