உலக மக்கள் பெரும்பாலானவர்களை பாதித்து, ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சர்க்கரை நோய் நம்மை தாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உங்களுக்கு இருக்கலாம். குறைந்தபட்சம் எந்த வயதில் இந்த நோய் தாக்குகிறது என்ற காலத்தையாவது தள்ளிப்போட வேண்டும் என்று நினைப்பீர்கள்.
சராசரி சர்க்கரை அளவை தாண்டும் அந்நாளில் தான் சர்க்கரை நோய் பாதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. பொதுவாக 3 மாத சராசரி ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள மருத்துவர்கள் உங்களுக்கு ஹெபிஏ1சி என்ற பரிசோதனையை செய்வார்கள். இதனை ஏ1சி பரிசோதனை என்றும் கூறலாம். இந்தப் பரிசோதனையில் நீங்கள் சராசரி அளவை நெருங்கி வருகிறீர்கள் என்றாலே, அடுத்தகட்டமாக சர்க்கரை நோயை நோக்கி அடியெடுத்து வைக்க உள்ளீர்கள் என்று பொருள்.
ஹெபிஏ1சி என்றால் என்ன? ரத்த சிவப்பு அணுக்களில் உள்ள புரதத்திற்கு பெயர் ஹீமோகுளோபின் ஆகும். இதன் மீது படிந்துள்ள கிளைசேடட் ஹீமோகுளோபின் என்னும் அளவை பரிசோதனை செய்வதன் மூலமாக நம் ரத்தத்தில் உள்ள குளூகோஸ் அளவை தெரிந்து கொள்ளலாம். ரத்தத்தில் எந்த அளவுக்கு குளுகோஸ் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு கிளைசேடட் ஹீமோகுளோபின் அளவு மிகுதியாக இருக்கும்.
ஹெச்பி1ஏசி அளவு 5.7-க்கு குறைவாக இருந்தால் அது சராசரி அளவாகும். அதுவே 5.7 முதல் 6.4 வரை இருந்தால் நீரிழிவு அபாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். 6.5க்கு மேல் இருந்தால் டைப் 2 நீரிழிவு பிரச்சினை உங்களுக்கு வந்துவிட்டது என்பது உறுதியாகிவிடும். ஆகவே, அபாய கட்டத்தில் உள்ளபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம்.
தினசரி உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வதை சிரமமான கடமை என்று கருதாமல் அதை பொழுதுபோக்காக மேற்கொள்ள வேண்டும். வாரம் ஒன்றுக்கு 150 நிமிடங்களுக்கு குறையாமல் பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஏரோபிக் பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலமாக உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாகும். அதன் எதிரொலியாக ஹெச்பிஏ1சி அளவுகள் குறையும்.
சீரான உணவு: சீரான உணவை கச்சிதமான அளவில் சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். நீங்கள் சாப்பிடும் உணவில் சுமார் 50 சதவீதம் காய்கறிகள் இருக்க வேண்டும். சுமார் 25 சதவீதம் புரதமும், 25 சதவீதம் முழு தானிய உணவுகளும் இருக்க வேண்டும். கொழுப்பு குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் மாவுச்சத்தை ஜீரணிக்க இது உதவும்.
ஒரே சீரான நேரத்தில் உணவு: தினசரி உணவு சாப்பிடும் நேரத்தை ஒரே மாதிரியாக கடைப்பிடிக்க வேண்டும். அதிக நேர இடைவெளியும் இருக்கக் கூடாது, உடனுக்குடன் சாப்பிடவும் கூடாது. அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிலும் சர்க்கரை நோய்க்கு எதிரான மருந்து எடுத்து வருபவர் எனில் உணவு கட்டுப்பாடு மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வபோது பரிசோதனை: வீட்டிலேயே குளுகோமீட்டர் வைத்து அவ்வபோது உங்கள் ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ளலாம். 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஹெபிஏ1சி பரிசோதனையை மருத்துவரிடம் செய்து கொள்ள வேண்டும். அபாய கட்டத்தை நெருங்கி வரும்பட்சத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
0 Comments:
Post a Comment