இந்த உலகத்தில் கல், மண், சிலைகள், படங்கள், ஓவியங்கள், எலும்புக்கூடுகள், ஏன் முடியை வைத்து கூட அருங்காட்சியகம் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மூளை அருங்காட்சியகம் என்று ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டர் வைத்து செய்தது அல்ல... உண்மையான மனித மூளை...
உண்மையில் மனித மூளையைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ளது. அதுவும் எங்கோ வடஇந்தியாவில் இல்லை. நமக்கு மிக அருகில் தான் இருக்கிறது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரத்தில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்) தான் இந்த மூளை அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது.
வெவ்வேறு நரம்பியல் நோய்கள் கொண்ட மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மூளை மாதிரிகள் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் மூளைக் கட்டிகள், பார்கின்சன் நோய், கால்-கை வலிப்பு, அல்சைமர் நோய் மற்றும் பிற மூளை தொடர்பான கோளாறுகள் உள்ள மூளைகளை இங்கே பார்க்கலாம்.
மனித மூளை மட்டும் அல்லாமல், முள்ளந்தண்டு வடம் மற்றும் பிற பாரன்கிமல் உறுப்புகள் அனைத்தும் அருங்காட்சியகத்தின் சேகரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த உறுப்புகளை பார்வையாளர்கள் தொடுவதற்கும் உணருவதற்கும் கூட வாய்ப்பு கிடைக்கின்றன. இது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும்.
நியூரோபயாலஜி துறையில் ஆர்வம் உள்ளவர்களும் மூளை சார்ந்த விஷயங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆரவமாக இருப்பவர்களின் நிச்சயமாக பார்க்க வேண்டிய அருங்காட்சியகம் தான் இது. இந்த தனித்துவமான நிம்ஹான்ஸ் மூளை அருங்காட்சியகம், பெங்களூரில் ஓசூர் மெயின் ரோடு, வில்சன் கார்டன் அருகில், அமைந்துள்ளது.
அருங்காட்சியத்தை சுற்றி பார்ப்பதைத் தாண்டி இறந்தபின் சடலங்கள் மூலம் உடல் உறுப்புகள் மற்றும் மூளை தானம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தை காண கட்டணங்கள் ஏதும் இல்லை. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை மட்டும், மதியம் 2:30 முதல் 4:30 மணி வரை செயல்படுகிறது. மற்ற நாட்களில், காலை 10:30 முதல் 12:30 மணி வரை, மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்கிறது.
No comments:
Post a Comment