நம் ரத்தத்தில் கால்சியம் சத்து மிக, மிக குறைவாக இருப்பதை கால்சியம் பற்றாக்குறை அல்லது ஹைபோகால்சீமியா என்று சொல்கிறோம். நம் உடலில் எலும்பு மற்றும் பல் ஆகியவற்றின் கட்டமைப்புக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாத சத்தாகும். இத்தகைய சூழலில், கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால், அதன் காரணமாக ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நீண்ட காலமாக போதுமான அளவுக்கு கால்சியம் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் பிரச்சினை ஏற்படக் கூடும். வயது காரணம் மற்றும் மரபணு ரீதியாகவும் நமக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்.
சீரற்ற உணவு முறை, சில மருந்துகளை உட்கொள்வது அல்லது கால்சியம் நிறைந்த உணவுகளுக்கு ஒவ்வாமை போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சினை ஏற்படக் கூடும். காரணம் எதுவாக இருந்தாலும், உடலில் கால்சியம் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் தென்படும்போது, அதை உரிய முறையில் பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிகுந்த சோர்வு மற்றும் பலவீனம் : உடல் சோர்வு என்பது பல்வேறு பிரச்சினைகளின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. எனினும், உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்போது கூட சோர்வு ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் உடல் பலவீனம் அடையக் கூடும். அத்துடன் லேசான தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் அல்லது கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
ஓஸ்டோபெனியா மற்றும் ஓஸ்டோபோரோசிஸ் : இது ஒருவகை எலும்பு தேய்மான நோய் ஆகும். கை விரல்கள் நேராக இல்லாமல் வளைந்து, நெளிந்து காணப்படும். எலும்பு அடர்த்தி குறைவதன் காரணமாக இதுபோன்ற பலவீனம் ஏற்படும்.
சரும பிரச்சினைகள் : சருமம் வறண்டு காணப்படுதல், நகங்களில் வெடிப்பு போன்றவை கால்சியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். குறிப்பாக, நகங்கள் மெலிந்து, பலவீனம் அடையும். சருமத்தில் அரிப்பு ஏற்படும்.
பல் பிரச்சினைகள் : எலும்புகளுக்கு மட்டுமல்லாமல் பற்களுக்கும் கால்சியம் சத்து மிக முக்கியமானதாகும். கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் பற்சிதைவு, ஈருகள் அரிப்பு போன்ற பிரச்சினை வரும்.
முறையற்ற இதயத்துடிப்பு : ரத்தத்தில் கால்சியம் சத்து அளவு சரியாக இருக்கும் போது நமது இதயத் துடிப்பும் சரியான அளவில் இருக்கும். அதுவே, கால்சியம் சத்து குறைந்தால் இதயத் துடிப்பு அதிகமாகிவிடும். சிலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூட மாற வாய்ப்பு உண்டு.
0 Comments:
Post a Comment