நுரையீரல் வறண்டு போகாமல், நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் சேர்க்கும் வேலையை மூக்கு செய்கிறது. மூக்கின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மூக்கு என்பது நமது தலையில் நுழையக்கூடிய ஒரு நுழைவாயிலாக கருதப்படுகிறது. மூக்கில் ஏற்படும் எந்த ஒரு அடைப்பு அல்லது நோயானது நேரடியாக நம் தலையை பாதிக்கக்கூடும். மூக்கு என்பது புலன் உறுப்பு என்ற அங்கீகாரத்தை தாண்டி, இது சுவாசத்திற்கான ஒரு முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. நுரையீரலை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களில் இருந்து மூக்கு பாதுகாக்கிறது. உடலுக்குள் மருந்தை உட்செலுத்த விரைவான ஒரு வழியாக மூக்கு கருதப்படுகிறது. அதோடு தலையை சென்றடைய இது ஒரு சிறந்த வழியாகவும் அமைகிறது. இப்பொழுது மூக்கின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்:-
சுத்தம் செய்தல்: உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை எப்பொழுதும் சுத்தமாக வைப்பது பல நன்மைகளை அளிக்கும். குறிப்பாக இது மூக்கின் ஆரோக்கியத்திற்கு அதிக பலன் தரும். அதோடு வீட்டினை காற்றோட்டமாகவும் வைத்துக் கொள்வது சுவாசித்தல் செயல்முறையை எளிதாக்கும். மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய உப்பு நீரை பயன்படுத்தலாம்.
பாதுகாத்தல்: உங்களுக்கு அடிக்கடி அலர்ஜி ஏற்படுமாயின் உங்கள் மூக்கிற்குள் ஒரு துளி நெய்யை விடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் மூக்குப் பாதையில் தொடர்பு கொள்வதை தடுக்கும்.
வலிமை சேர்த்தல்: உங்களுக்கு மூக்கடைப்பு இருந்தால் வறண்ட பொடியை உள்ளிழுப்பது உங்களுக்கு உதவ கூடும். இது வீக்கத்தை ஆற்றுவதோடு, மூக்கில் காணப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களையும் அகற்றுவதற்கு உதவும்.
தூண்டுதல்: வழக்கமான முறையில் 'அனுதைலத்தை' மூக்கில் விடுவது ஒட்டுமொத்த தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது தலைவலியை போக்குவதோடு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நீங்கள் மூக்கில் ஏதேனும் சிக்கலை அனுபவிக்கும் போது அது உங்கள் ஒட்டுமொத்த உடலையும் பாதிப்பதை என்றைக்காவது கவனித்துள்ளீர்களா? மூக்கடைப்பு ஏற்படும் சமயத்தில் உங்களுக்கு நன்றாக தூங்க வேண்டும் போல இருக்கும், ஆனால் தூங்க முடியாது. மூச்சு விடுவதிலும் சிரமத்தை அனுபவிப்பீர்கள். உடம்பு அசதியாக இருக்கும், ஆனால் ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம்.
ஆகவே உங்கள் மூக்கின் ஆரோக்கியத்தை கவனிப்பதை உங்களின் அன்றாட பழக்கமாக கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகள் ஒரு ஆலோசனை மட்டுமே. எந்தவொரு குறிப்பையும் பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment