Search

TNPSC, UPSC தேர்வுகளுக்கு உண்டு உறைவிட இலவசப் பயிற்சி

 TNPSC (Group-1), UPSC (IAS, IPS) தேர்வுகளை எழுத உள்ளவர்களுக்காக உண்டு உறைவிட இலவசப் பயிற்சியை சேவாபாரதி வழங்கி வருகிறது.


இது தொடர்பாக சேவாபாரதி தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இயற்கை சீற்றங்களான சுனாமி, பெருமழை போன்ற காலங்களிலும் கொரானா பெருந்தொற்றுக் காலத்திலும் சேவாபாரதி தமிழ்நாடு அரும் சேவை புரிந்ததை அனைவரும் அறிவர். மேலும், பல அரிய சேவைகளை சேவாபாரதி வருடம் முழுவதும் வழங்கி வருகிறது. கல்விச் சேவையின் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா நகரில், பாரதி பயிலகம் எனும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வு மையத்தை கடந்த 2021ல் துவக்கி சேவாபாரதி நடத்தி வருகிறது.

சேவாபாரதியின் இப்பணியில் பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமி இணைந்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. பி.எல். ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமி கடந்த 16 ஆண்டுகளாக, இந்தப் பணியில் சிறப்பான சேவையைச் செய்து வருகிறது. கடந்தாண்டு, பாரதி பயிலகம் தமிழக அரசின் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கும், குரூப் 2 முதன்மை தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்தது.

மேலும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கும் ஒரு புதிய திட்டத்தை பாரதி பயிலகம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வருகின்ற ஜூன் 2023 முதல், டி.என்.பி.எஸ்.சி. (குரூப்-1), யு.பி.எஸ்.சி (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்)., தேர்வுகளுக்கு ஓராண்டிற்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளித்து மாணவர்கள் அரசுப் பணியில் சேரும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், சமுதாயத்தில் / பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது, ஓராண்டுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.

இதில் சேர மே-25க்குள், contactbharathi57@gmail.com என்ற இ-மெயில் ஐடியில், மாணவர்கள் தங்கள் முழுவிவரத்துடன் (Bio-Data) விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தி, சேவாபாரதி, பாரதி பயிலகம், பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமியின் குழுவால் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண். 9003242208" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment