உங்கள் 2 குழந்தைகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க என்ன செய்ய வேண்டும்..? - Agri Info

Adding Green to your Life

June 10, 2023

உங்கள் 2 குழந்தைகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க என்ன செய்ய வேண்டும்..?

 வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறது என்றால் எப்போதும் போர்க்களமாகவே காட்சியளிக்கும். இரவு தூங்கி கண் விழிப்பதுதான் தாமதம். எழுந்த உடனேயே குழந்தைகள் பிரச்சினையை தொடங்கி விடுவார்கள். மீண்டும் இரவு தூங்கும் வரையிலும் இந்தச் சண்டைகள் ஓயாது.

அதே சமயம், பெற்றோராகிய நாமே ஆச்சரியம் அடையும் அளவுக்கு எப்போதாவது குழந்தைகள் தங்களுக்குள் கொஞ்சிப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் அடுத்த நாளில் மீண்டும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் தொடருவதை நாம் பார்க்க முடியும்.

இரண்டு குழந்தைகள் என்றாலும், இரண்டுமே நம் கண்கள் தான். யார் ஒருவர் மீதும் கூடுதல் அன்பை பொழிந்துவிட முடியாது. ஒரு குழந்தையின் மீது மட்டும் பாகுபாடு காட்டிவிடவும் முடியாது. சில வீடுகளில் அப்பா செல்லம், அம்மா செல்லம் என்று குழந்தைகள் இருவேறாக இருப்பதைப் பார்க்க முடியும்.

சிலர் பெண் குழந்தை மீது மட்டும் அளவில்லா பாசம் வைத்திருப்பார்கள். சிலர் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அதிகமான சுதந்திரம் கொடுப்பார்கள். ஆனால், இந்த பேதங்களை கடந்து இருவரையும் ஒன்றுபோல வளர்க்க வேண்டும். அவர்களிடையே ஒற்றுமை மேலோங்க நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒற்றுமை மேலோங்க செய்ய வேண்டியவை

  • குதூகலமான வேலைகளை குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதை அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும்படியாக இருக்க வேண்டும். இதைச் செய்யும்போது ஒருவருக்கு, ஒருவர் கற்றுக் கொள்வதுடன், புரிந்துணர்வு அதிகரிக்கும்.
  • தன் உடன் பிறந்தவர் மீது அன்பும், அக்கறையும் காட்ட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அதை எப்படியெல்லாம் மேற்கொள்ளலாம் என்பதை அடிக்கடி உணர்த்த வேண்டும்.
  • குழந்தைகளிடையே சின்ன, சின்ன சண்டைகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால், முக்கியமான சண்டைகள் நடைபெறும் சமயத்திலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நாம் தலையிட்டு சுமூகமான முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகளின் நற்குணங்களை பாராட்டி, அதைப் போலவே நீயும் இருக்க வேண்டும் என்று மற்றொரு குழந்தையையும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் உதவி மனப்பான்மையை உடனுக்குடன் பாராட்ட வேண்டும்.
  • செய்யக் கூடாதவை :

    • ஒரு குழந்தையிடம் மட்டும் அதீத அன்பு காட்டுவது, பாச மழை பொழிவது, அதற்கு மட்டும் கேட்கின்ற அனைத்தையும் வாங்கிக் கொடுப்பது என்று இல்லாமல் இருவரையும் சம அளவில் பார்க்க வேண்டும்.
    • வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இடையே எல்லா விஷயத்திலும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது. தோல்விகள் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம். அதுவே பொறாமைகளுக்கு வழிவகை செய்யும்.
    • குழந்தைகள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, யாரோ ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்ற வகையில் நாம் நடந்து கொள்ள கூடாது.
    • குழந்தைகள் ஒருவரை, ஒருவர் குற்றம் சுமத்தும் சமயங்களில் அதை கண்டுகொள்ளாமல் கடந்து விடக் கூடாது. எந்தப் பிரச்சினையானாலும் உடனுக்குடன் தீர்த்து வைத்து அன்பையும், சமரசத்தையும் கற்பிக்க வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment