டீ-யுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்... ஏன் தெரியுமா..? - Agri Info

Adding Green to your Life

June 3, 2023

டீ-யுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்... ஏன் தெரியுமா..?

 சுட்டெரிக்கும் கோடை வெயில் காலத்தில் கூட, டீ-யை விட்டுக் கொடுக்காத அளவுக்கு டீ பிரியர்களாக இருப்பவர்கள் நம் மக்கள். அதிகாலைப் பொழுதில் எழுந்தவுடன் ஆவி பறக்க, மணமிக்க ஒரு டீ அருந்தாவிட்டால் அன்றைய பொழுதே நகராது நமக்கு.

ஒவ்வொரு நாட்டிலும் டீ-யில் என்னென்ன சேர்க்கப்படுகிறது என்பது வேறுபடுகிறது. பால் சேர்க்காமல் தயாரிப்பதுதான் ஒரிஜினல் டீ என்று பலர் வாதிடுவார்கள்.

அதில் உண்மை இருக்கவும் செய்கிறது. ஆனால், இனிப்பு சேர்க்காத டீ குறித்து நாம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். நீரிழிவு நோயாளிகள் கூட அரை அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்வது தான் வழக்கம். சிலர் வெல்லம் சேர்த்துக் கொள்வார்கள். டீ உடனான நம் பந்தம் இந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும் நிலையில், டீ-யில் வெல்லம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா!

தவறான உணவு சேர்க்கைகள்: ஒவ்வொரு உணவுப் பொருளின் மனமும், சுவையும் வெவ்வேறானது என்று நமக்கு தெரியும். ஆனால், பல வகை உணவுகளை சேர்த்து சாப்பிடுவது நம் பழக்கமாக உள்ள நிலையில், சில உணவுப் பொருட்களை ஒன்று சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. ஆம், சில உணவுப் பொருள்கள் ஒன்றிணையும்போது செரிமானப் பிரச்சினை ஏற்படுகிறதாம்.

அந்த வகையில் டீ-யும், வெல்லமும் ஒன்று சேரக் கூடாது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. வெல்லத்தில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனுடன் பால் சேர்ப்பது ஆபத்தானதாம். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமோனி கூறுகையில், “ ஆயுர்வேதத்தைப் பொருத்தவரையில் தவறான சேர்க்கை அடிப்படையில் சேருகின்ற உணவுகளால் குடலில் நச்சுக் கழிவுகள் உருவாகும். அது செரிமானத்தை பாதிக்கும். ஒவ்வொரு உணவுக்கும் பிரத்யேகமான தரம், சுவை, தன்மை, செரிமானத் திறன் போன்றவை உள்ளன என்று ஆயுர்வேதம் வரையறை செய்துள்ளது.

வெல்லம் உஷ்ணத்தன்மை கொண்டது. ஆனால், பால் குளிர்ச்சி கொண்டது. இந்த இரண்டையும் சூடான நிலையில் ஒன்று சேர்க்கும்போது பொருத்தமற்ற உணவுப் பொருளாக மாறிவிடும்’’ என்று தெரிவித்தார்.

மாற்று வழி உண்டா? பால் அல்லது டீ-யில் இனிப்பு சுவை கட்டாயமாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மாற்று வழிகளை கையாளலாம். கற்கண்டு அல்லது பனங்கருப்பட்டி, தேன் போன்றவற்றை பாலில் சேர்த்துக் கொள்ளலாம். சிலர் பேரீட்சை பழங்களை சேர்த்து பாலுக்கு இனிப்புச் சுவையூட்டுகின்றனர்.

வேறென்ன உணவுகளை சேர்க்கக் கூடாது.! பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. அதேபோல பால் மற்றும் மீன், தயிர் மற்றும் வெண்ணெய், நெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் அழற்சி, சரும பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் நோய்கள் போன்றவை ஏற்படலாம் என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment