நம் காலத்து கிராமத்து வாழ்க்கையில் ஒரு பேச்சு தினசரி பயன்பாட்டில் இருந்தது. அதாவது, “பொழுதிருக்கவே சாப்பிட்டுவிடு’’ என்று அப்போதைய காலத்தில் குறிப்பிடுவார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால் சூரியன் மறைந்து, பொழுது சாய்ந்த நேரத்திலேயே சாப்பிட்டு விடுவது.
இதற்கு என்ன காரணம்? பழைய காலத்தில் முதலில் மின்சார வசதியும், மின் விளக்குகளும் கிடையாது. விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு சாப்பிடுவதைக் காட்டிலும் வெளிச்சம் உள்ளபோதே சாப்பிடுவது சரியானது என்று நினைத்தனர். அதுபோக அதிகாலைப் பொழுதில் எழுந்து வயல் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தனர். இதனால் முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு உறக்கத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது.
ஆனால், காலப்போக்கில் மின்சார வசதி, அதைத்தொடர்ந்து டிவி என்றெல்லாம் வந்தபிறகு, டிவி பார்த்துக் கொண்டே அல்லது பார்த்து முடித்துவிட்டு சாப்பிட செல்வது என்று மாறியது. இன்றைக்கு இருக்கின்ற அவசரமான வாழ்க்கைச் சூழலில் இரவு 10 மணியை தாண்டி சாப்பிடுவதும், உடனே தூங்கச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.
பொழுதிருக்க சாப்பிட்டால் நல்லதா? பழைய காலத்தில் முறையில், சூரியன் மறைந்த அந்திப் பொழுதில் சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முன்கூட்டியே சாப்பிடுவதால் செரிமானத்திற்கு மிக அதிகமான நேரம் கிடைக்கிறது மற்றும் மாலை 5 அல்லது 6 மணிக்கு கொஞ்சம் வயிற்றை நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் துரித உணவுகளை நாடும் பழக்கம் தவிர்க்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சாப்பிட்டால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. உடல் பருமன் கொண்ட 15 நபர்களுக்கு இரவு 9 மணிக்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அவர்களை மாலை 5 மணிக்கு சாப்பிட வைத்து, நாள்பட அவர்களின் உடல் மாற்றங்களை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதிக ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சி: ஹிந்தி திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மாவின் கட்டுக்கோப்பான அழகிற்கு பின்னால் உள்ள ரகசியங்களில் இந்த அந்திமாலைப் பொழுது உணவுப் பழக்கமும் இருக்கிறதாம். மாலை 5.30 முதல் 6 மணிக்குள்ளாக உணவை முடித்துக் கொள்கிறாராம்.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்? வெகு முன்னதாக சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரும். சூரிய அஸ்தமன நேரத்தில் நம் உடலில் மெலோடினின் என்னும் ஹார்மோன் அதிகப்படியாக உற்பத்தி ஆக தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட்டால் நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. அதே போல சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நாம் அதிக உணவை சாப்பிடும் போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை உயர்த்தும் இன்சுலினை நம் உடல் வெளியிடுகிறது. எனவே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கார்டிசோல் மற்றும் மெலடோனின் ஆகியவை ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. இது நிறைய ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இரவு உணவு சீக்கிரமே முடித்து கொள்வதன் காரணமாக கலோரிகள் விரைவாக எரிக்கப்பட்டு விடுவதால் உடல் எடை குறைப்புக்கு இப்பழக்கம் உதவியாக அமையும். அடுத்த நாள் காலையில் அதிக ஆற்றல் கிடைக்கும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர முடியும். இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு இடையே இதை உங்களால் செய்து கொள்ள முடிந்தால் உண்மையிலேயே நீங்கள் பாக்கியசாலிதான்.
Click here for latest employment news
No comments:
Post a Comment