சில சமயங்களில் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள். திடீரென்று உடல்நிலை பாதிப்படையும். இது அவ்வப்போது வரும் உடல்நலக் கோளாறுதான் என நீங்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்கள். ஆனால் இப்படி அடிக்கடி சோர்வாகவும் மந்தமாகவும் இருந்தால், அது ரத்தசோகையாக கூட இருக்கலாம். இந்நோய் மிக மோசமான பிரச்சனைகளை கொண்டு வரும். உலகளவில் ரத்தசோகை நோயாளிகள், அதுவும் குறிப்பாக பெண் நோயாளிகள் இந்தியாவில் தான் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஜிண்டால் நேச்சுரல் கேர் பயிற்சி மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். பபினா நந்தகுமார் கூறுகையில், “ரத்தசோகை வருவதற்கு பல காரணிகள் உள்ளது. உங்கள் உணவில் போதுமான அளவிற்கு இரும்புச் சத்தோ, புரதங்களோ, விட்டமின் பி-12 மற்றும் காப்பர் இல்லையென்றால் உங்களுக்கு ரத்தசோகை வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. குடல் பிரச்சனைக் காரணமாக சில சமயங்களில் சிறு குடலால் ஊட்டசத்தை கிரகிக்க முடியாது. அதுபோன்ற சமயங்களில் ஒருவருக்கு ரத்தசோகை வரும் வாய்ப்பு அதிகம்” என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “மெனோபாஸ் வராத பெண்களுக்கும் மெனோபாஸ் நிறைவுற்ற பெண்களுக்கும் – மாதவிடாய் சமயத்தில் அதிகமான ரத்த அணுக்கள் வெளியேறியிருக்கும் - ஆண்களை விட ரத்தசோகை வரும் வாய்ப்பு அதிகம். கர்ப்பிணி பெண்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ரத்தசோகை வரும் ஆபத்து உள்ளது” என விளக்குகிறார்.
நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிவப்பு ரத்த அனுக்கள் குறைவாக இருக்கும். ஆகையால் இவர்களுக்கு எளிதாக ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் அல்சர் அல்லது பிற உள்ளுறுப்புகளில் தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறினாலும் கூட ரத்தசோகை ஏற்படும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது ரத்தசோகை இருந்தால், குறிப்பாக அரிவாள் உயிரணு ரத்தசோகை இருந்தால் உங்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக 65 வயதை கடந்த அனைவருக்கும் ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இயற்கை முறையில் நம் உடலில் ரத்த செல்களின் உற்பத்தியை பெருக்கி ரத்தசோகையை போக்கவும் இரும்புச் சத்தை அதிகரிக்கவும் உங்களுக்காக சில டிப்ஸ்களை தருகிறோம்.
பச்சைக் காய்கறிகள், கீரைகள் : இரும்புச்சத்து குறைபாட்டை போக்க வேண்டுமென்றால் உங்கள் உணவில் நிறைய காய்கறிகளையும் கீரைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே இதில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. கோசுக்கீரை, முட்டைகோஸ், ப்ரோகோலி, சுரைக்காய் போன்றவை ரத்தசோகையை போக்க கூடியது.
வேர் காய்கறிகள் : நம் உடலின் ரத்த அளவை அதிகரித்து ரத்தசோகையை போக்க வேண்டுமென்றால் வேர்க் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். இவற்றில் உள்ள மினரல்கள் நமக்கு நிறைய பலன்களை கொடுக்கிறது. ஆகவே ரத்த செல்களின் உற்பத்தியை பெருக்கவும் நம் உடலுக்கு தேவையன ஊட்டச்சத்து கிடைக்கவும் வேர்க் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.
நட்ஸ் & சீட்ஸ் : இவற்றில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள மினரல் மற்றும் வைட்டமின்கள் ரத்தசோகையை குணமாக்குகிறது. நம் உணவில் அடிக்கடி நட்ஸ்களையும், சீட்ஸ்களையும் (பாதாம், வால்நட்) எடுத்துக் கொண்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து நமது உடலில் உள்ள ரத்த செல்களின் உற்பத்தியை அதிகபடுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆகவே ஊட்டச்சத்துகள் மிகுந்த இவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் சி : வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலுக்கு போதுமான இரும்புச்சத்து கிடைக்கிறது. உடலின் சில குறிப்பிட்ட பகுதியில் இரும்புச்சத்தை அப்படியே தக்கவைக்க உதவுகிறது வைட்டமின் சி. அதன்பின் நம் உடல் எளிதாக அதை கிரகித்துக் கொள்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெரி ஆகியவற்றில் அதிகமாக வைட்டமின் சி உள்ளது. இவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. எனவே ரத்தசோகையிலிருந்து தடுத்து நம்மை காக்கிறது.
No comments:
Post a Comment