உடல் பருமன் மற்றும் உடல் இயக்கமற்ற சோம்பலான வாழ்க்கை முறை ஆகியவை தான் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்ற விழிப்புணர்வு பலரிடமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உடற்பயிற்சி செய்தல் என்னும் தாரக மந்திரத்தை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதிகப்படியான கொழுப்புகள் மற்றும் கலோரிகளை கரைக்க இது மிக, மிக அவசியமாகிறது. பொதுவாக காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் தான் பரவலாக உள்ளது. அதே சமயம், முந்தைய நாளில் அதிகப்படியான வேலை செய்வதால் ஏற்படும் களைப்பு காரணமாகவும், நீண்ட நேரம் தூங்கி காலையில் தாமதமாக எழுவதாலும், அதன் பின் குளித்து தயாராகி உடனடியாக அலுவலகம் விரைவதை பலரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
மாலை அல்லது இரவு வேளைகளில் இவர்கள் உடற்பயிற்சிகளை செய்கின்றனர். காலை அல்லது மாலை என எந்த வேளைகளில் உடற்பயிற்சி செய்தாலும் அது உடல்நலனுக்கு நல்லதுதான் என்றாலும், காலையில் பயிற்சி செய்வது இன்னும் சிறப்பான பலன் கிடைக்க உதவியாக அமையும். குறிப்பாக காலையில் யோகா பயிற்சிகள் செய்வது மற்றும் உடலை வளைத்து, நெளித்து தயார்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
காலையில் உடற்பயிற்சிகளை செய்வதால் கிடைக்கும் பலன்கள்
- காலையில் பயிற்சிகளை செய்வது சோம்பலை நீக்கி உங்களை சுறுசுறுப்பானவராக மாற்றுகிறது. அன்றைய நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
- உடற்பயிற்சி செய்வதன் மூலமாக மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கின்ற நிலையில், நாள் முழுவதும் உங்கள் முகம் களைப்பின்றி பொலிவுடன் காட்சியளிக்கும்.
- உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதால், காலையில் பயிற்சி செய்வதன் காரணமாக நீரிழிவு நோய்க்கான அபாயம் குறைகிறது. அதேபோல உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை கொண்டவர்கள் காலையில் பயிற்சி செய்யும்போது ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகின்றது.
- உங்கள் கவனத்திறனை மேம்படுத்துகிறது மற்றும் தெளிவான சிந்தனையை தருகிறது.
- நாள் முழுவதும் மகிழ்ச்சியான சிந்தனையை மேம்படுத்துகிறது.
- தூக்கமின்மை பிரச்சினையால் அவதி அடையும் நபர்களுக்கு இது நல்ல தீர்வை தருகிறது.
- பசியை தூண்டுகின்ற ஹார்மோன்களை இது கட்டுப்படுத்துவதால் உங்கள் பசி உணர்வு குறைகிறது. இதன் எதிரொலியாக உடல் எடையை குறைப்பது எளிமையாகிறது.
- என்னதான் இருந்தாலும் காலையில் உடற்பயிற்சி செய்ய எனக்கு நேரமே இல்லை அல்லது அதிகாலை நேர பணிக்குச் செல்பவர் என்ற நிலையில் நீங்கள் இருப்பின், பிற்பகல் அல்லது மாலை வேளைகளிலாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்த பின் நம் தசைகளுக்கு ஏற்படும் வலு இழப்பை சரி செய்ய புரதம் மிகுந்த உணவுகளை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment