நம்மில் பலருக்கு சர்க்கரை இல்லாத ஒரு நாளை நிச்சயமாக நினைத்து கூட பார்க்க முடியாது. சர்க்கரை சேர்க்கப்படாத காபி, டீ, திண்பண்டங்கள் போன்றவை நம்மை வருத்தம் அடைய செய்து விடும். சாக்லேட், பிஸ்கட் மற்றும் பிற தின்பண்டங்களையாவது தவிர்த்து விடலாம். ஆனால் காபி மற்றும் டீயில் பாதியளவு சர்க்கரையாவது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.
ஆனால் அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை சாப்பிடுவதால் என்னென்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்து சர்க்கரை அளவை குறைத்துக் கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் ஒரு மாதம் சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பதால் நம் உடலில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டால் நிச்சயமாக நீங்களும் அதனை பின்பற்றுவீர்கள்.
சீரான ரத்த சர்க்கரை அளவு: சர்க்கரையை முழுவதுமாக தவிர்ப்பது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்க உதவும். இது சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறைத்து நமது ஆற்றல் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.
உடல் எடை இழப்பு: சர்க்கரை நமது கலோரி அளவுகளை அதிகரிக்க கூடிய ஒரு பொருளாகும். இதனை தவிர்த்து விடுவது உங்களுக்கு எடை இழப்பை ஏற்படுத்தும். ஆகவே நீங்கள் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் அதனை முழுவதுமாக நிறுத்தி விடுவது உங்களுக்கு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
சர்க்கரைக்கான குறைந்த ஏக்கம்: ஒரு சிலர் சர்க்கரைக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் நமது உணவில் இருந்து அதனை முழுவதுமாக அகற்றும்போது நாளுக்கு நாள் சர்க்கரைக்கான ஏக்கம் குறைவதை நாம் கவனிக்கலாம்.
அதிக ஆற்றல்: நமது ஆற்றல் அளவை அதிகரிக்க சர்க்கரை சாராத உணவுகளை நாம் எடுக்கும்போது, நமக்கு நாள் முழுவதும் போதுமான ஆற்றல் கிடைக்கிறது.
வாய் ஆரோக்கியம்: சொத்தைப்பல் ஏற்படுவதற்கு சர்க்கரை ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே சர்க்கரையை அகற்றி விடுவது நமது வாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும்.
சரும ஆரோக்கியத்தில் முன்னேற்றம்: சர்க்கரையை தவிர்ப்பது தெளிவான சருமத்தையும், முகப்பருவையும் குறைக்கும் என கூறப்படுகிறது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கொழுப்பானது இரத்தத்தில் டிரைகிளிசரைடு வடிவில் காணப்படுகிறது. அன்றாட சர்க்கரை அளவை குறைப்பது கலோரிகளை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும். இதனால் கொலஸ்ட்ரால் அளவுகளும் குறையும். இது இறுதியில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. சர்க்கரையை முழுவதுமாக அகற்ற வேண்டும் என்ற அவசியம் ஒரு சிலருக்கு இருக்காது. கூடுதல் சர்க்கரையை தவிர்த்தாலே போதுமானதாக இருக்கும். உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை அகற்ற நீங்கள் முடிவு செய்தீர்கள் என்றால், சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் பின்வருவனவற்றை பயன்படுத்தலாம்:-
இயற்கை இனிப்பான்கள்: ஸ்டீவியா, மோங்க்பழம் (Monk fruit) , எரித்ரிடால் போன்றவை குறைந்த கலோரி இனிப்பான்கள். இவற்றை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது ரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.
பழங்கள்: பழங்களில் இயற்கை சர்க்கரையுடன் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது. சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும் பொழுது அதனை பூர்த்தி செய்ய பழங்களை தேர்வு செய்யலாம்.
மசாலா வகைகள்: பட்டை, ஜாதிக்காய், வெண்ணிலா போன்ற மசாலா பொருட்கள் உணவிற்கு நறுமணத்தை சேர்ப்பதோடு இனிப்பு சுவையையும் தரக்கூடியவை.
டார்க் சாக்லேட்: அதிக அளவு கோகோ கொண்ட டார்க் சாக்லேட் குறைந்த அளவு சர்க்கரையை கொண்டுள்ளது.
சர்க்கரை சேர்க்கப்படாத பானங்கள்: தண்ணீர், மூலிகை டீ அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத காபி, சோடா போன்றவற்றை தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
எந்த ஒரு பொருளையுமே மிதமான அளவுகளில் சாப்பிடுவது நமக்கு நல்லது. இது சர்க்கரைக்கும் பொருந்தும். சர்க்கரையை குறைவான அளவுகளில் சாப்பிடுவதன் மூலமாக நமது ஆரோக்கியத்தை நாம் கவனித்துக் கொள்ளலாம் என்பதை மனதில் வையுங்கள்.
0 Comments:
Post a Comment