சிகரெட் பிடிப்பதால் மூளையை சுருக்கி நினைவாற்றலை குறைக்கும் அபாயம் - ஆய்வில் தகவல்..! - Agri Info

Adding Green to your Life

June 21, 2023

சிகரெட் பிடிப்பதால் மூளையை சுருக்கி நினைவாற்றலை குறைக்கும் அபாயம் - ஆய்வில் தகவல்..!

 இன்றைய வாழ்க்கை முறையில் மிக மோசமான பழக்கம் என்று குறிப்பிட்டால் அதில் புகை பழக்கம் முதல் இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு புகை பழக்கத்தால் ஏராளமான பாதிப்புகள் உடலுக்கு உண்டாகும். இது புகை பிடிக்கும் நபருக்கும் மட்டுமன்று, அவரை சுற்றி இருப்போரையும் பாதிக்க கூடும். புகை பழக்கம் என்பது உலகளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்க கூடிய இரசாயனங்களால் புற்றுநோய் பாதிப்பு உண்டாகுகிறது. இதற்கான அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் பெரும்பாலானோருக்கு வெளிப்படுவதில்லை. இதனாலேயே எப்போதும் போல ஆரோக்கியமாக இருப்பதாக புகை பழக்கம் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.

இது புற்றுநோயை உண்டாக்குவதோடு, நுரையீரல், இதயம் மற்றும் பொது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மூளையில் புகை பழக்கத்தால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றி பெரிதாக விவாதிக்கப்படுவதில்லை. சமீபத்திய ஆய்வில், புகை பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையில் பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர். புகைபிடிப்பதால் மூளை சுருக்கமடையவும், மூளையின் அளவு குறையவும், மூளையின் செயல்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நமது மூளையானது பெருமூளை, சிறுமூளை மற்றும் மூளைத் தண்டு (மெடுல்லா) ஆகிய மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. எனவே, ஒருவர் புகைபிடிக்கும் போது அதில் உள்ள நிகோடின் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மூளையின் இந்த முக்கிய பகுதிகளை பாதிக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நமது உடலில் மிக முக்கிய உறுப்பான மூளை பாதிக்கப்பட்டால், அது நமது உயிருக்கே ஆபத்தாக கூடும். குறிப்பாக அதிக அளவில் புகைப்பிடிப்பவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக புகை பழக்கம் உள்ளவர்களுக்கு பெருமூளைப் புறணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அதன்படி, புகைபிடிக்காதவர்களின் மூளையுடன் ஒப்பிடும்போது, புகைபிடிப்பவர்களின் பெருமூளையின் அளவு குறைவதாக கண்டறிந்துள்ளனர். மேலும், இதன் காரணமாக மூளையின் அளவு கணிசமாகக் குறையக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.

மூளையின் மிகப்பெரிய பகுதியாக கருதப்படும் பெருமூளையானது நமது பார்வை திறன், காதுகேட்கும் திறன், பேச்சு திறன், தொடுதலுக்கான திறன், உணர்ச்சி, கற்றல் திறன் மற்றும் சிந்தனைக்கான முக்கிய காரணியாக உள்ளது. எனவே, இதன் அளவு குறையும் பட்சத்தில் இது நேரடியாக முன்பு குறிப்பிட்ட அத்தியாவசிய திறன்களை பாதிக்கிறது. புகை பழக்கத்தால் மூலையில் ஏற்படுகிற மோசமான விளைவுகள், ஒருவருக்கு நினைவாற்றல் குறைபாடு, பதட்ட மனநிலை, உளவியல் சார்ந்த சிக்கல்கள் ஆகியவற்றை உண்டாக்கும்.

ஒருவர் அதிக அளவில் புகைபிடிப்பதால் மூளைக்கு செல்ல கூடிய இரத்தத்தின் அளவு குறையும். இதனால், இரத்த நாளங்களில் இரத்தம் உறைந்து, இரத்தக் கட்டிகளை உருவாக்கி மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். மேலும், புகை பழக்கத்தால் ஒருவருக்கு நியூரோடிஜெனரேஷன், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியல் சார்ந்த நோய்களின் அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே, புகைப்பழக்கத்தை கைவிட மருத்துவரின் ஆலோசனையை பெற்று, சரியான சிகிச்சைகளை எடுத்து கொண்டு வருவது ஆரோக்கியமான வாழ்வை தரும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment