நம் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளையும், அதனால் ஏற்படும் அறிகுறிகளையும் நாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை. வழக்கமாக, நம் உடலில் போதுமான விட்டமின்களும் மினரல்களும் இல்லாத காரணத்தால் தான் நமக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். அதையும் கூட நாம் தெரிந்துகொள்ளாமல் தான் இருப்போம்.
வறண்ட சருமம், குறட்டை, வறட்சியான கண்கள், ஈறுகளில் ரத்தப்போக்கு போன்றவை விட்டமின், மினரல் குறைபாட்டால் ஏர்படும் அறிகுறிகளாகும். இப்படி நம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான குறைபாடுகளை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பது குறித்து, எல்லாருக்கும் புரியும் வகையில் கேள்வி – பதில் வரிசையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுட்டுள்ளார் டாக்டர்.விஷாகா. சரிவிகித டயட்டின் முக்கியத்துவம் குறித்தும், நமது ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவைப்படும் ஊட்டச்சத்துகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தோல் வறண்டு போவது, அரிப்பு ஏற்படுவது : உங்கள் தோல் வறண்டு போயும், அரிப்பும் ஏற்பட்டால், கொழுப்பு சார்ந்த உணவுகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாததன் காரணமாகவே இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக டாக்டர்.விஷாகா கூறுகிறார். இவர்கள் தங்கள் உணவில் அரோக்கியமான கொழுப்பு சார்ந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். மேலும், கூடுதல் ஊட்டச்சத்திற்கு ஓமேகா – 3 மாத்திரைகளையும் சாப்பிட்டால் நல்லது.
மாதவிடாய் சமயத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு : ரத்தத்தை உறைய வைக்கும் செயல்முறையில் கால்சியமும் விட்டமின் சி-யும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டும் அதிகமாக உள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக் கொண்டாலே, மாதவிடாய் சமயத்தில் ரத்தப்போக்கு குறையத் தொடங்கும். கால்சியம் மற்றும் விட்டமின்-சி மாத்திரைகளை சாப்பிட்டாலும் ரத்தப்போக்கு குறையும்.
குழந்தைகள் சிலேட் குச்சிகளை சாப்பிடுவது: உங்கள் குழந்தை சிலேட் குச்சிகளையோ அல்லது வேறு சுண்ணாம்பு பொருட்களையோ சாப்பிட்டால், அவர்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். இதை பிகா (PICA) என அழைக்கிறார்கள். இந்தப் பற்றாக்குறை இருப்பவரக்ளுக்கு எந்த ஊட்டச்சத்தையும் கொண்டிராத மண், சிலேட் குச்சி, முடி, தாள் போன்ற பொருட்களை சாப்பிட ஆர்வமாக இருக்கும்.
குறட்டை: குறட்டை விடுவது, அதுவும் குறிப்பாக அதிக உடல் எடை கொண்டவர்கள் அல்லது குறுகிய கழுத்தை கொண்டவர்கள் குறட்டை விட்டால், அது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான அறிகுறியாகும். தூக்கத்தின் போது நமது சுவாசம் தொடர்ந்து தடைபடுவதாலேயே குறட்டை ஏற்படுகிறது.
வறட்சியான கண்கள்: விட்டமின்-ஏ குறைபாடு காரணமாகவே கண்களைச் சுற்றி வறட்சியாக இருக்கும். ஒருவேளை நீங்கள் கண்களுக்கு காண்டேக்ட் லென்ஸ் உபயோகித்தாலும் அல்லது ஐசோட்ரெடினாயின் போன்ற முகப்பருக்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், இதுபோன்று கண்கள் வறட்சியாக காட்சி தரும்.
ஈறுகளில் ரத்தப்போக்கு: உங்கள் உடலில் விட்டமின்-சி பற்றாக்குறை இருந்தால் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படும். ஆகையால் உங்கள் உணவில் விட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
“நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கும். நவீன கால டயட், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும். நம் உடலுக்கு வேறு நோய்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால், உடனடியாக இந்தக் குறைபாட்டை கண்டுபிடித்து அதை சரிசெய்ய வேண்டும்” என்கிறார் டக்டர்.விஷாகா.
0 Comments:
Post a Comment