மழைக்காலத்தில் பயணம் செய்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சொந்த வாகனம் , பேருந்து, ரயில் என்று எதில் பயணித்தாலும், ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் இருந்து காற்றுடன் மிதந்து வரும் சாரல் காற்றோடு , மழை பொழிந்து பசுமையுடனும் புத்துணர்ச்சியுடனும் மிளிரும் சூழலை ரசிப்பதே தனி சுகம். அதை ரசிப்பதற்காகவே பலர் மழை காலங்களில் சுற்றுலா செல்வர்.
சொந்த வாகனத்தில் தூறல் மழை, குளிர்ந்த காற்றோடு நீண்ட தூர சாலைகளில் நீண்ட நேரம் ஓட்டும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. நீங்களும் மழைக்கால பயணத்தை மிகவும் ரசிக்கிறீர்கள் என்றால், சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். அவை பயணத்தின் போது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சில சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.
வானிலை முன்னறிவிப்பு : எங்கு செல்வதற்கு முன்னும், அங்குள்ள வானிலை நிலையை அறிந்து கொள்ளுங்கள். ஒரு இடத்திற்கு செல்லும் 1 வாரத்திற்கு முன்னரே அந்த இடத்தின் வானிலை மற்றும் எதாவது பேரிடர் எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கிறதா என்று தெரிந்துகொண்டு செல்லுங்கள்.
வாகனத்தைச் சரிபார்க்கவும்: நீங்கள் சாலைப் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், பயணத்திற்கு பாதுகாப்பான வாகனத்தை சரியாக தேர்வு செய்யவும். சொந்த வாகனம் என்றால் வாகனத்தின் டயர்கள், பிரேக்குகள் மற்றும் விளக்குகள் போன்றவற்றை சர்வீஸ் சென்டரில் முழுமையாகச் சரிபார்த்தால் நல்லது. மழை பெய்யும்போது இடையில் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிப்பது சிரமமாகிவிடும்.
வானிலைக்கு ஏற்ப பேக்கிங் செய்யுங்கள்: மழைநீரால் சேதமடையக்கூடிய பொருட்களை ஒன்றாக எடுத்துச் செல்லாதீர்கள். அதனுடன் ஒரு நீர்ப்புகா பையை எடுத்துச் செல்லவும். மொபைல், கேமரா, டார்ச் போன்றவற்றை வாட்டர் ப்ரூப் பைகளில் மட்டும் வைத்திருங்கள். ஈரமான ஆடைகள் அல்லது பொருட்களை வைக்க தனியாக ஒன்று அல்லது இரண்டு கூடுதல் பிளாஸ்டிக் பைகளை வைத்திருங்கள். அவற்றை ஒன்றாக போட்டால் நல்ல ஆடைகளும் வீணாகும். வாசம் வீசும்.
ஆடைகளின் தேர்வு: உங்கள் ஆடைகள் ஈரமான பிறகு எளிதில் உலரும் வகையில் இருப்பது முக்கியம். ரெயின்கோட், குடை, ஜாம்பூட் போன்றவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். நீர் புகாத பாதணிகளை எடுத்துச் செல்லுங்கள். அதே போல அடர்த்தியான எளிதில் காயாத ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
விதிகளைப் பின்பற்றவும்: மழைக்காலத்தில் சாலை மற்றும் போக்குவரத்து மாற்றங்களின் வழிகாட்டுதல்களை தெரிந்துகொண்டர் அதை சரியாக பின்பற்றவும். அதே போல வழிமாற்றங்கள் ஏதும் உள்ளதா என்பதையும் அறிந்து கொண்டு கிளம்புங்கள். அதே போல மாற்று பாதைகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆப்லைன் மேப் வைத்திருப்பது முக்கியம்.
உணவு தண்ணீர் : பயணத்தின் போது போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் வெளியில் சாப்பிடும் தண்ணீர் மற்றும் உணவால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான நீண்ட நாள் கெடாத உணவு பண்டங்களை கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதே போல அவச கால மருந்துகளையும் உடன் வைத்திருங்கள்.
ஃபோன் மூலம் தொடர்ந்து இணைந்திருங்கள்: உங்கள் வழித் தகவலை அல்லது திட்டத்தை உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் ஏதேனும் தகவல் தொடர்பு செயலிழந்தால் அவர்கள் உங்களுக்கு உதவ முடியும். ஏதேனும் ஆபத்து என்றால் உடனடியாக உங்களை கண்டறியவும் இது உதவி செய்யும்.
0 Comments:
Post a Comment