ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது நீரிழிவு நோய் அபாயம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவை மூலம் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு ஏற்படுவதற்கான ஒரு சில அறிகுறிகள் இருக்கிறது. அதே போல நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் என்னதான் உணவு கட்டுப்பாடு மருந்துகள் என்று சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சித்தாலும் ஒரு சில நேரங்களில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கலாம். நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை பின்வரும் ஐந்து அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
மந்தமாக உணர்வது : எவ்வளவு விழிப்போடு சுறுசுறுப்பாக இருக்க முயற்சித்தாலும் சாதாரண விஷயம் கூட சரியாக புரிந்து கொள்ள முடியாமல், ஏனோ தானோவென்று மந்தமாக இருப்பது ஒரு அறிகுறியாகும். ஆங்கிலத்தில் இதை brain fog என்று குறிப்பிடுவார்கள். எதுவும் சரியாக தோன்றாத ஒரு குழப்பமான மனநிலையை, சோர்வான மனநிலையை இது குறிக்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் மூளைக்கு சிக்னல்களை எடுத்து செல்லும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களில் இது தாக்கத்தை எற்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுவதால், மூளை மந்தமாகி இந்த அறிகுறி தோன்றுகிறது.
நீண்ட நேரம் பசி : ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் எப்போதும் பசித்துக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும். அதிகமான இன்சுலின், ரத்தத்தில் உயரும் குளுக்கோஸ் அளவு இரண்டுமே பசி சார்ந்த ஹார்மோனை பாதிக்கும். இதனால்தான் நீரிழிவு நோயாளிகளை பொதுவாகவே உணவுகளை பிரித்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எக்சீமா என்ற தோல் பிரச்சனை : எக்ஸிமா என்பது ஒரு தோல் நோயாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அதாவது சர்க்கரை அளவை அவர்களால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அது தொழில் சின்ன சின்ன வெடிப்புகளாகவும் கட்டிகளாகவும் வெளிப்படும். மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு எக்சீமா அதிகம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
பெண்களுக்கு முடி உதிர்வு : பெண்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து, அவர்களுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள். செல்களுக்கு செல்லும் பொதுவான ரத்த ஓட்டம் குறைவதால், ஆக்சிஜன் ஓட்டமும் குறைகிறது. எனவே, இது முடி வளர்ச்சியை பாதிக்கிறது, முடி உதிர்வை அதிகரிக்கிறது.
படபடக்கும் இதயத்துடிப்பு : திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை குளுக்கோஸ் சர்ஜ் அல்லது கிராஷ் என்று கூறுவார்கள். இதன் காரணமாக இதயம் வேகமாக துடிக்கும். உதாரணமாக, ஹெவியான டின்னர் அல்லது விருந்துக்குப் பிறகு, இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, அடுத்த வேளை உணவு அல்லது அடுத்த நாள் காலை உணவை குறைவான GI கொண்ட உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருப்பதை உறுதி செய்ய எவையெல்லாம் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் என்பதைப் பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டும். தினமும் சாப்பிடுவதற்கு முன்பு சர்க்கரை அளவை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment