இரவு நேர உணவுக்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலை உணவு சாப்பிடுவதாலும், அன்றைய தினத்திற்கான புத்துணர்ச்சியை வழங்குவதாலும் காலை உணவு மிக அவசியமாகிறது. சிலர் காலையில் வயிறு நிரம்ப சாப்பிடுகின்றனர். இன்னும் சிலர் அளவோடு சாப்பிடுகின்றனர்.
எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றுடன் இருக்கும்போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உள்ளது. நம் சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கும் வகையில் ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சஹாயா இன்ஸ்டாகிராமில் பல்வேறு ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். குறிப்பாக 4 விதமான உணவுகளை சாப்பிட கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு : கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் காலையில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்துகின்றனர். ஆனால், சர்க்கரையை காட்டிலும் தேனில் கலோரிகள் மிக அதிகம் என்பதாலும், தற்போது மார்க்கெட்டில் தேன் என்ற பெயரில் ரைஸ் சிரப் வருவதாலும் இதை எடுத்துக் கொள்வது சரியல்ல என்று நேஹா தெரிவிக்கிறார். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.
டீ மற்றும் காஃபி : அதிகாலை பொழுதில் நம் எல்லோருக்குமே புத்துணர்ச்சி தரக் கூடிய பாகங்களாக இவை இருப்பினும், பலருக்கு அமில சுரப்பை அதிகப்படுத்தி செரிமான பிரச்சினைகளை உண்டாக்குமாம். தூங்கி எழுந்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு இதுபோன்ற பானங்களை தவிர்க்க வேண்டும் அல்லது உணவுடன் சேர்த்து அருந்த வேண்டும் என்று நேஹா அறிவுறுத்துகிறார்.
இனிப்பான உணவுகள் : காலையிலேயே ரத்த சர்க்கரை அளவுகள் விறுவிறுவன ஏறுவதை தடுக்க வேண்டும் என்றால், இனிப்பான உணவுகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது மாவுச்சத்து வேட்கையை தூண்டும் மற்றும் ஆற்றலை மட்டுப்படுத்தும்.
பழங்கள் : பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை என்றாலும், அவை எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை ஆகும். இதனால் உடனடியாக பசி எடுக்கும். மேலும் சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிட்டால் அல்சர் உண்டாகும்.
அதே சமயம் காலை வேளையில் புரதச்சத்து உணவுகள், நட்ஸ், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று நேஹா தெரிவித்தார்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்: ஒவ்வொரு தனிநபரின் உடல்நிலையும் வெவ்வேறான தன்மையை கொண்டிருக்கும். சில உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை கொடுக்கலாம். ஆகவே உங்கள் உடல்நிலைக்கு தகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களை கலந்து ஆலோசிக்கவும்.
0 Comments:
Post a Comment