நாம் உயிர் வாழ நீர் மிக அவசியமானது என்று எல்லோரும் அறிந்து வைத்திருப்போம். ஆனால், தினசரி எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும், நம் உடலுக்கு எவ்வளவு தான் தண்ணீர் தேவை என்பது நமக்கு தெரிந்திருக்காது. நம் உடலில் 50 முதல் 60 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது.
தினசரி தண்ணீர் தேவையை நேரடியாக குடிநீரில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்பதில்லை. பழங்கள், பழச்சாறுகள், இளநீர், பானங்கள் போன்றவற்றில் இருக்கக் கூடிய நீர்ச்சத்தும் இதில் அடக்கமாகும். பொதுவாக பெண்கள் 11.5 கப் அளவும், ஆண்கள் 15.5 கப் அளவும் தினசரி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நாம் உண்ணும் உணவுகளின் மூலமாக நமக்கான 20 சதவீத நீர்ச்சத்து தேவை கிடைத்து விடுமாம். எஞ்சியுள்ள 80 சதவீத நீர் தேவையை நாம் குடிநீர், பானங்கள் மூலமாக ஈடுகட்டிக் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட அளவுகள் ஒரு சராசரி கணக்கு மட்டுமே. தினசரி எவ்வளவு தண்ணீர் துல்லியமாக தேவை என்பது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு நாளுக்குமே கூட வேறுபடும்.
வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் மூலமாக எவ்வளவு நீர்ச்சத்து வெளியேறுகிறது, நமது மூச்சுக்காற்றின் ஈரப்பதம் உள்பட பல காரணங்களின் அடிப்படையில் நீர்ச்சத்து தேவை மாறுபடுகிறது.நாம் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறோம், சுற்றியுள்ள சிதோஷ்ண நிலை என்ன மற்றும் நம் உடல்நிலை என்ன என்பதைப் பொருத்தும் நீர்ச்சத்து தேவை மாறுபடுகிறது. 6 மாதங்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நாம் தண்ணீர் கொடுக்கவே தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிலான புட்டிப்பால் ஆகியவற்றின் மூலமாகவே குழந்தைகளின் நீர்ச்சத்து தேவை பூர்த்தி ஆகிவிடும். குழந்தைகளுக்கு உணவூட்ட தொடங்கும்போது, அவர்களது உணவில் கொஞ்சம், கொஞ்சமாக நீர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு 4 முதல் 8 அவுன்ஸ் வரையில் தண்ணீர் தேவைப்படும்.
குழந்தைக்கு ஒரு வயது நிரம்பிய நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்ணீரின் அளவை நாம் அதிகரித்துக் கொள்ளலாம். கோடை காலங்களில் மிகுதியாகவும், மழை மற்றும் குளிர் காலங்களில் குறைவாகவும் தண்ணீர் தேவை இருக்கும்.
தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் :
- நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் நீர்ச்சத்தை நம்பி உள்ளது. போதுமான அளவில் தண்ணீர் குடித்தால் மட்டுமே உடலில் உஷ்ணம் அதிகரிக்காமல் வெப்பநிலை சீரான அளவில் இருக்கும். திசுக்கள் பாதுகாக்கப்படும் மற்றும் மூட்டுகளில் ஈரப்பதம் கிடைக்கும்.
- உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை சிறுநீர், வியர்வை மற்றும் மலம் ஆகியவை மூலமாக வெளியேற்றுவதற்கும் நீர்ச்சத்து அவசியமான தேவையாகும்.
வேறென்ன பலன்கள் கிடைக்கும்..!
- பொதுவாக நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொண்டால் வயோதிக பிரச்சினைகள் அதிகரிக்காது. இளமையான தோற்றம் நீடிக்கும்.
- டைப் 2 வகை நீரிழிவு கட்டுப்படுத்தப்படும்.
- உடல் பருமன் தவிர்க்கப்படும் மற்றும் உடல் எடை சீரான அளவில் இருக்கும்.
- மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. மலம் இலகுவாக வெளியேறும்.
- நம் சருமங்களில் சுருக்கம் ஏற்படாமல் புத்துணர்ச்சியாக இருக்க நீர்ச்சத்து அவசியமாகும்.
No comments:
Post a Comment