உங்கள் செல்ல குழந்தைகளின் சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட உங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த குட்டி, குட்டி விரல்களால் உங்களை முதல் முறை வருடும் போதும் சரி, குழந்தைகள் தவழ்ந்து, நடக்கத் தொடங்கிய போதும் சரி, மழலை மொழியில் பேசும் போதும் சரி நம் மனம் ஆனந்தத்திலும், குதூகலத்திலும் திளைக்கும்.
வளர் இளம் பருவத்தில் இருக்கும் போது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் நம் பார்த்து பார்த்து செய்வோம். ஆனால் குழந்தைகளின் உடல்நலன் நம்மை அவ்வப்போது கவலை அடைய செய்யும் விஷயமாக அமைந்து விடுகிறது.
ஒரு பெற்றோராக குழந்தையை வளர்த்தெடுப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. மிகுந்த சவால்கள் மற்றும் அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவை இதற்கு தேவைப்படுகிறது. குழந்தை வளர்ச்சி அடைய ஊட்டச்சத்து உள்ள மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைப்பதே மாபெரும் சவாலாக உள்ளது.
எப்படியாவது ஏதோ ஒருமுறை துரித உணவுகளை குழந்தைகள் சாப்பிட்டு விட்டால், அதற்குப் பிறகு அதன் பின்னாடியே குழந்தைகளின் மனம் அலைபாயத் தொடங்கி விடுகிறது. அடம்பிடித்தாவது துரித உணவுகளை நம் கையாலேயே வாங்கி கொடுக்க வைத்து சாப்பிடுவதை குழந்தைகள் பழக்கமாக்கிக் கொள்கின்றனர்.
இவ்வாறு துரித உணவுகளை சாப்பிடுவதால் இளம் வயதிலேயே உடல் பருமன் ஏற்படுவதோடு பிற்காலத்தில் பல்வேறு விதமான நோய்களுக்கு அதுவே அடிப்படையாக அமைந்து விடுகிறது. ஆகவே கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி குழந்தைகளிடம் துரித உணவு பழக்கத்தை நாம் விரட்டி அடிக்க வேண்டும்.
நாமே முன்னுதாரணம் : வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு துரித உணவுகள் என்பது பறந்து வந்து கிடைத்து விடாது. எங்காவது ஏதோ ஒரு சமயத்தில் நாம் துரித உணவுகளை சாப்பிட்டிருப்போம். அப்போது குழந்தைகளுக்கும் அதனை பகிர்ந்து இருப்போம். அதுதான் பழக்கத்திற்கு அடிப்படை. ஆகவே குழந்தைகள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றால் நாமும் அதை முற்றாக தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட ஊக்குவிக்க வேண்டும்.
விளைவுகளை எடுத்துச் சொல்லவும் : துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நலனுக்கு எந்த விதமான தீங்குகள் ஏற்படும் என்பதனை குழந்தைகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும். அதேசமயம் சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் குழந்தைகளின் பங்கு : ஆரோக்கியமான வகையில் இன்றைக்கு என்ன உணவு செய்யலாம், அதற்கு என்னென்ன தேவை, அதை எப்படி செய்யலாம் என்பதை குழந்தைகளிடம் ஆலோசனை செய்யுங்கள். அவர்களுக்கு தெரியாவிட்டாலும் இது குறித்து பேசும்போது அவர்கள் மனதில் ஆரோக்கியமான உணவுகள் குறித்த ஆர்வம் மற்றும் பிடிப்பு அதிகரிக்கும்.
எப்போதாவது ஒருமுறை : இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுகளை முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டால், என்றைக்காவது ஒரு முறை அல்லது ஏதேனும் விசேஷ சமயங்களில் மட்டும் இதனை குழந்தைகள் சாப்பிடுமாரு நாம் கட்டுப்பாடுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் : வீட்டில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பழங்கள், முழு தானியங்கள், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட பண்டங்கள், நட்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
0 Comments:
Post a Comment