இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கண் வறட்சி பிரச்சினை மாறி வருகிறது. இது கண்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். காலைப் பொழுதில் எழுந்த உடனே கண்களில் மணல், மணலாய் அழுக்கு வெளியேறும் மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.
அன்றைய நாள் முழுவதும் இந்த பிரச்சினை தீவிரமடையும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு பார்வை மங்கலாக மாறலாம். ஆனால், கண் வறட்சி என்பது நீண்டகால பார்வை பிரச்சினைகளை ஏற்படுத்தாது. கண் வறட்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வானிலை வறட்சியின் காரணமாக கண்களிலும் எரிச்சல் ஏற்படுகிறது.
இத்துடன் புகைமூட்டம் அல்லது மாசுபாடு போன்ற காரணங்களாலும் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு அலர்ஜி காரணமாகவும் கண்களில் எரிச்சல் ஏற்படும். உங்கள் குழந்தைகளின் கண் நலன் காப்பதற்கு கண் மருத்துவரை அணுகி நீங்கள் சிகிச்சை அளிக்கலாம். அதே சமயம், வீட்டிலேயே சில எளிய தீர்வுகளை முயற்சி செய்யலாம்.
குழந்தைகளுக்கு கண் வறட்சி ஏற்பட காரணம் என்ன? குழந்தைகளின் அன்றாட பணிகள் அல்லது நடவடிக்கைகளில் கண்களில் வறட்சி ஏற்பட காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் வாசிப்பது, கம்ப்யூட்டர் பார்ப்பது, வீடியோ சாதனங்களில் விளையாடுவது மற்றும் தூசு நிறைந்த இடத்தில் விளையாடுவது போன்ற காரணங்களால் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.
கடுமையான அலர்ஜிகள், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் கண் சார்ந்த பிரச்சினைகளை குழந்தைகளுக்கு விவரிக்க தெரியாது. இத்தகைய சூழலில் குழந்தைகள் என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து பெற்றோர் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
என்னென்ன அறிகுறிகள் தென்படும் ? குழந்தைகள் அடிக்கடி கண் சிமிட்டுவது, கண்கள் சிவந்து காணப்படுவது, தொடர்ச்சியாக கண்களை தேய்ப்பது, வெளிச்சத்தை கண்டால் கண் கூசுவது, மங்கலான பார்வை, வாசிப்பதிலும், டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதிலும் சிரமத்தை எதிர்கொள்ளுதல் போன்றவை குழந்தைகளின் கண்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.
வீட்டில் தீர்வு காண்பது எப்படி ? கண்களில் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய புகைமூட்டம், மாசுபாடு போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சூரிய வெப்பம், காற்று, தூசு போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் சன்கிளாஸ் அணிந்து கொள்ளலாம். வீட்டு முறை முயற்சிகளில் பலன் தராமல் கண்களில் நீடித்த எரிச்சல் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
No comments:
Post a Comment