தன்னுடைய கேரியரில், வில்லியம் வேண்டெர்ப்ளூமென் என்பவர் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்துள்ளார். தற்போது Vanderbloemen என்ற தேடுதல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் வில்லியம். ஒரு வேலைக்கு நீங்கள் முழு தகுதியுடையவராக இருந்தாலும், இந்த வேலைக்கு இவர் சரிபட்டு வரமாட்டார் என உங்களை கூறுவதற்கு மனிதவள துறை அதிகாரிகளுக்கு பல வழிகள் உள்ளதாக இவர் கூறுகிறார்.
நேர்காணல் செய்பவரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், நட்பானவராகவும், தன்னம்பிக்கைமிக்கவராகவும், தொழில்முறை சார்ந்த அணுகுமுறையை கடைபிடிப்பவராகவும் உங்களை அவர்கள் முன் காண்பித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தனது நேர்காணல் அணுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
வேலைக்கான நேர்காணலின் போது மனிதவள துறை அதிகாரியை எப்படி ஈர்க்க வேண்டும் என மூன்று டிப்ஸ்களை நமக்கு தருகிறார் வில்லியம் அளித்துள்ளார்.
சரியான உடையை அணியுங்கள் :
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பலரும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அலுவலக மீட்டிங் கூட இப்போதெல்லாம் ஆன்லைனில்தான் நடக்கிறது. இதனால் பலரும், வீட்டில் தானே இருக்கிறோம் என சாதாரண உடையை அணிகிறார்கள். ஆனால் உங்களுக்கான நேர்காணல் வீடியோ கால் மூலம் நடைபெற்றாலும், சாதாரண உடையை அணியாதீர்கள்.
சிலர் நம் முகம் மட்டும் தானே தெரியப் போகிறது என நினைத்து, இடுப்பிற்கு கீழ் ஷார்ட்ஸ் போன்ற உடையை தயவுசெய்து அணியாதீர்கள். ஏனென்றால், நேர்காணலுக்கான உடையை அணிந்துள்ளீர்களா என்பதை பார்க்க, சில சமயங்களில் உங்களை எழுந்து நிற்கக் கூட சொல்வார்கள். இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், வேலை கிடைக்க வேண்டுமென்றால், நாம் தான் சரியான உடையை அணிந்திருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை நாமே நாசமாக்கி கொள்ளக்கூடாது அல்லவா. ஆகையால் நேர்காணலுக்கு ஏற்ற சரியான உடையை அணியுங்கள்.
நேர்காணல் செல்லும் நிறுவனத்தைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் :
பலரும் நேர்காணல் செல்லும் போது, தாங்கள் விண்ணப்பித்த வேலைக்கு தொடர்பான பல தகவல்களையும் தெரிந்துகொண்டு அதற்கு சம்மந்தமான கேள்விகள் ஏதும் கேட்டால் பதிலளிக்க தயாராக இருப்பார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே நேர்காணல் செல்லும் நிறுவனங்களின் விவரங்களையும், சமீபத்தில் அந்த நிறுவனத்தில் நடந்த மாற்றங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ நேர்காணல் செய்பவரின் விவரங்களை கூட தெரிந்து வைத்திருப்பார்கள்.
நேர்காணல் தொடங்கிய முதல் 5-10 நிமிடங்களில், இந்த நிறுவனம் குறித்து நீங்கள் பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளீர்கள் என்பதை மனிதவள துறை அதிகாரிகளுக்கு உணர்த்திவிட்டால், நீங்கள் அப்போதே பாதி கிணறை தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். இன்றைய வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் போட்டி நிறைந்தது. புதிதாக சிந்திப்பவர்களும் எதையும் ஆர்வமாக கற்றுக்கொள்பவர்களுமே இங்கு வெற்றியடைகிறார்கள்
சம்பளம் குறித்து எப்போது கேட்க வேண்டும்?
நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே உங்களின் சம்பளம் குறித்து கேட்காதீர்கள். அப்படி கேட்டால், அது மிகப்பெரிய தவறாகப் போய்விடும். இந்த தவறை பல விண்ணப்பதாரர்கள் செய்கிறார்கள். இப்படி கேட்பதால் உங்களை பணத்தாசை பிடித்தவர் என நேர்காணல் செய்பவர் நினைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அவர்களே சம்பளம் குறித்து பேசும் வரை எதுவும் கேட்காதீர்கள். ஆனால், இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட நேர்காணலின் போது கூட உங்களின் சம்பளம் குறித்து யாரும் பேசவில்லை என்றால், நேர்காணலின் முடிவில் அதைப்பற்றி மென்மையாக கேளுங்கள்.
சம்பளத்திற்காக தான் அனைவருமே வேலைக்குச் செல்கிறார்கள். ஆனாலும், அது குறித்து நேர்காணலில் நீங்கள் அதிகமாக பேசாமல் இருந்தால், உங்களுக்குதான் பல வகையிலும் நல்லது. நேர்காணலின் போது சம்பளத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக அந்த நிறுவனத்தின் நோக்கம், இலக்குகள், அங்குள்ள பணியிடத்தின் கலாச்சாரம் போன்றவை குறித்து நீங்கள் அதிகமாக ஆர்வம் காட்டினால், உங்கள் பதிலில் ஈர்க்கப்பட்டு அதிக சம்பளத்தில் உங்களை தேர்வு செய்யக் கூட வாய்ப்புள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment