நீங்க தனிமையாக இருக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத 6 விஷயங்கள்..! - Agri Info

Adding Green to your Life

August 11, 2023

நீங்க தனிமையாக இருக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத 6 விஷயங்கள்..!

 தனிமையில் இருக்கும் நேரத்தை வரப்பிரசாதமாக நாம் கருத வேண்டும். ஆனால் நாம் இப்படி தனிமையில் இருக்கும் போது அதை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தனியாக இருக்கும் நேரத்தில் இதெல்லாம் செய்யக்கூடாது, இதெல்லாம் செய்ய வேண்டும் என சில விஷயங்கள் உள்ளன. அதை நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும். அப்படியான 6 விஷயங்களை இந்தக் கட்டுரையில் கூறியுள்ளோம்.

இதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் : தனிமையில் இருக்கும் நேரத்தை நாம் எப்படி, எந்த வகையில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொறுத்துதான், நமது தனிப்பட்ட வளர்ச்சியும் ஆரோக்கியமும் இருக்கும். சில சமயங்களில் வாழ்க்கையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முன்பு நமக்கொரு ஓய்வு தேவைப்படும். வேலையிலிருந்து சிறுது காலத்திற்கு ஓய்வெடுப்பதோ அல்லது சமூகத்திலிருந்து சில காலம் ஒதுங்கியிருப்பதும் கூட ஒரு வகையில் நமக்கு நல்லதே.

சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் :நீங்கள் தனியாக இருக்கும் சமயத்தில், உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் குறித்து ஆழமாக யோசியுங்கள். உங்கள் இலக்கு என்ன, குறிக்கோள் என்ன போன்ற அர்த்தமுள்ள கேள்விகளை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இதை செயல்படுத்த சிறந்த வழி, இவை எல்லாவற்றையும் எதிலாவது எழுதி வையுங்கள். அப்போதுதான் உங்கள் ஆழ் மனசு குறித்து உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும். உங்களை நன்கு புரிந்து கொள்வீர்கள்.

முழுதும் உங்களை தனிமைப்படுத்தி கொள்ளாதீர்கள் : நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிடும் போது உங்கள் மனநிலை நன்றாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், மற்றவர்களோடு பழகுவதை முற்றிலும் நிறுத்திவிடாதீர்கள். முக்கியமாக உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். நம் மனநிலை நன்றாக இருக்க வேண்டுமென்றால் மனிதர்களோடு அவசியம் உரையாட வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர்களை அடிக்கடி சந்தித்து பேசுங்கள். உங்களுக்கு விருப்பமான சமூக நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை பின் தொடருங்கள் : நாம் தனிமையில் இருக்கும் சமயத்தில் தான் நமக்கு விருப்பமுள்ள, ஆர்வமுள்ள விஷயங்களை பின் தொடர முடியும். அது ஓவியம், எழுத்து, கவிதை, இசை என எதுவாகவும் இருக்கலாம். நீங்கள் சுதந்திரமாக இருக்கும் இந்த சமயத்தில் தான் உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயங்களை செய்ய முடியும். இது உங்களின் படைப்புத் திறனை மட்டும் வளர்ப்பதில்லை; உங்களுக்கு ஒரு நிறைவையும் எடுத்துக்கொண்ட செயலை முடித்துவிட்டோம் என்ற சாதித்த உணர்வையும் கொடுக்கும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலிருந்து விலகியிருங்கள் : தனிமையில் இருக்கும் அந்த சமயத்திலும் ஸ்மார்ட்போனையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். தொடர்ந்து நீங்கள் இதை பயன்படுத்தி வந்தால், அதிகப்படியான தகவல்கள் உங்கள் மூளைக்குள் செல்லும். இதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்து பாருங்கள். உங்கள் சிந்தனைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நீங்கள் மதிப்பு கொடுக்க ஆரம்பிப்பீர்கள்.

எதிர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் : நாம் தனிமையில் இருக்கும் போது பழைய நினைவுகளும் எதிர்மறை எண்ணங்களும் தோன்றும். இது இயல்பானதுதான். ஆனால் எப்போதும் அதிலியே மூழ்கி இருந்தால், உங்களின் எதிர்கால வளர்ச்சி தடைபடும். நேர்மறை எண்னங்களை வளர்த்துக் கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

தனிமையில் இருக்கும் போதும் வேலைப்பளுவில் மூழ்காதீர்கள் : குறிப்பிட்ட நேரம் தனிமையில் இருப்பது நல்லதுதான். ஆனால் அதன்மீது பெரிய எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தனிமையில் இருந்தால் மட்டுமே ஒரு வேலையை முடிக்க முடியும் என்ற நிலைக்குச் செல்லாதீர்கள். தனிமையில் இருக்கும் போது நன்றாக ஓய்வெடுங்கள். உங்களை புதுப்பித்துக் கொள்ள இந்த தனிமையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயங்களில் தனிமையில் இருக்கும் போது எதுவும் செய்யாமல் “சும்மா” இருப்பதும் அவசியமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment