நல்லதொரு வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் அமைவது சிறப்பான வரம் என்றாலும், அலுவலக வாழ்க்கை அதே போல் அமைந்து விடும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. போட்டியும், பொறாமையும் கொண்ட சக ஊழியர்கள், எப்போதுமே நம் மீது எரிந்து விழும் உயர் அதிகாரிகள் என்று பல இன்னல்களுக்கு இடையே நாம் பணியாற்ற வேண்டி இருக்கும்.
கடும் பணிச்சுமை, இறுதிக்கெடு போன்றவை நமக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தும். பொருளாதார பாதுகாப்பு வேண்டியும், நமக்கென்று வேலை உத்தரவாதம் வேண்டியும் பல சமரசங்களுக்கு இடையே நாம் பணியாற்றிக் கொண்டிருப்போம். இத்தகைய தருணத்தில் நம் மன நலனை பாதுகாப்பதற்கு கீழ்காணும் டிப்ஸ்களை பின்பற்றலாம்.
எல்லைகளை வரையறுத்துக் கொள்ளுங்கள் : மிகுந்த ஈடுபாட்டுடன், நம் திறமை முழுவதையும் பயன்படுத்தி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நம்முடைய திறன் வரம்பை காட்டிலும் கூடுதலான பணிச்சுமை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இயல்புக்கு மாறான பணி சுமையை நம் மீது திணித்தால் அதை ஏற்க முடியாது என்று மறுத்து விடுங்கள்.
சுய அக்கறைக்கு முக்கியத்துவம் : இயந்திரம் போல ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் நம்முடைய சுய ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அலுவலகத்தில் பணிகளுக்கு இடையே அவ்வபோது 10, 15 நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதுடன், இரவில் நிம்மதியான உறக்கம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிடித்தமான விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தி மனநலனை மேம்படுத்த வேண்டும்.
ஆதரவு கோருதல் : என்னதான் முயற்சி செய்தாலும் பணி ரீதியான ஸ்ட்ரெஸ் மற்றும் கவலை உங்கள் மனதை ஆட்கொண்டு விட்டது என்றால், உங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இது குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
பாசிட்டிவ் பணிச்சூழல் : அலுவலகத்தில் பலதரப்பட்ட தொந்தரவுகள் மற்றும் இன்னல்கள் இருந்தாலும் கூட, முடிந்தவரை அந்த சூழலை நமக்கு சாதகமானதாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நியாயமான அளவில் நமக்கு ஒப்படைக்கப்படும் பொறுப்புகள் மற்றும் இலக்குகளை பூர்த்தி செய்தால் யாரிடத்திலும் பகைமை காட்ட வேண்டிய தேவை இருக்காது.
வேலையை ராஜினாமா செய்தல் : நம் உடல் நலம் மற்றும் மன நலனை காட்டிலும் மதிப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து, உடல் நலன் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக மருத்துவத்தில் பணத்தை கொண்டு சென்று கொட்டுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. ஓரளவுக்கு பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்து கொண்டால், உங்களுக்கு இன்னல் தருகின்ற வேலையை விட்டுவிட்டு வேறொரு நல்ல வேலையை தேடிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment