சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக நீரழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக குயினோவாவை எடுத்துக்கொண்டால், உணவுக்கு பிந்தைய ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
நீரழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் உணவு மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற உணவுக்கு பதிலாக குளூட்டன் ஃப்ரீ மற்றும் புரதச்சத்து, நார்ச்சத்து, 9 வகையான அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த குயினோவாவை எடுத்துக்கொள்வது உடலில் உருவாகும் நோய்களை குறைக்கவும், தடுக்கும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களை விட குயினோவாவை உட்கொண்டால், ரத்தத்தில் உணவுக்கு பிறகான சர்க்கரையின் அளவு குறைவதாகவும், நீரழிவு நோய் இல்லாதவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியத்தை குறைப்பதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது.
65 வயதிற்கும் மேற்பட்ட 9 நீரழிவு நோயாளிகளுக்கு 4 வாரத்திற்கு வழக்கமான உணவுடன் குயினோவாவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சர்க்கரை நோயாளிகள் குயினோவாவை சாப்பிட ஆரம்பித்த பிறகு ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கணிசமான அளவிற்கு குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன. குறைந்த கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட குயினோவாவை உட்கொண்டதால், பங்கேற்பாளர்களின் எடை, உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவை குறைந்துள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாமை, வரகு, தினை போன்ற சிறுதானிய வகையைச் சேர்ந்த குயினோவா, தாவர புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஒரு கப் சமைத்த குயினோவாவில் சுமார் 8 கிராம் புரதம், 5 கிராம் நார்ச்சத்து உள்ளதாக ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கான ஃபோர்டிஸ் சி-டிஓசி மையத்தின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா கூறுகையில், குயினோவாவை நீரழிவு நோய் ஏற்படுவதற்கான அபாய கட்டத்தில் இருப்பவர்களும் மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் உட்கொள்ளலாம். இதில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. குயினோவாவில் உள்ள பினாலிக் அமிலங்கள் உணவுக்கு பிந்தைய ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது” என தெரிவித்துள்ளார்.
ஹார்வர்ட் டிஹெச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்தி ஆய்வு முடிவுகளின் படி, குயினோவா உட்பட அனைத்து வகையான முழு தானியங்களும், மரணத்திற்கான அபாயத்தைக் குறைக்க உதவும் என்பதை சுட்டிக்காட்டியுளது. தினந்தோறும் 70 கிராம் அளவிற்கு முழு தானியங்களை உட்கொள்ளும் நபர்களுக்கு, முழு தானியம் உட்கொள்ளாத நபர்களை விட மரணத்திற்கான அபாயம் 22 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இருதய நோயால் இறக்கும் அபாயம் 23 சதவீதமும், புற்றுநோயால் இறக்கும் அபாயம் 20 சதவீதமும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
குயினோவாவை சமைப்பது எப்படி?
- சாமை, தினை, வரகு போன்ற பிற சிறு தானியங்களைப் போலவே குயினோவாவையும் கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி சமைத்து சாப்பிடலாம். கூடுதல் சுவையை விரும்புவோர் குயினோவாவுடன் மசாலா மற்றும் மூலிகைகளைக் கலந்து வெரைட்டி ரைஸ் போலவும் சமைக்கலாம்.
- பால் அல்லது தண்ணீரில் சமைத்த குயினோவாவை பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து காலை உணவாக உட்கொள்ளலாம்.
- வேகவைக்கப்பட்ட குயினோவாவை சத்தான காய்கறிகள் கலந்த சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம்.
- சோளத்தை பாப் செய்து பாப் கார்ன் தயாரிப்பது போலவே குயினோவாவையும் வறுத்து சாப்பிடலாம்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment