"நமது எதிர்காலத்தை நம்மால் மாற்றியமைக்க முடியாமல் போய்விட்டாலும், எதிர்காலத்தை பாதிக்க கூடிய ஒரு சில பழக்கங்களை நிச்சயமாக நம்மால் மாற்ற முடியும்." இதனை கூறியவர் நமது முன்னாள் குடியரசு தலைவரான உயர்திரு டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். நம்மை அறியாமலேயே நாம் பின்பற்றி வரும் ஒரு சில கெட்ட பழக்கங்கள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது பற்றியும் சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
மோசமான தூக்க பழக்கம் : பெரியவர்கள் தினமும் 6 முதல் 8 மணி நேரம் தரமான இரவு தூக்கத்தை பெறுவது அவசியமாக கருதப்படுகிறது. போதுமான அளவு தூங்காமல் இருப்பது நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய மனநிலை மாற்றங்கள், எரிச்சல், கவனிப்பதில் சிக்கல் மற்றும் ஞாபகத்திறன் குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், உடல் ரீதியாக இது உடல்பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம். மேலும் தரமான தூக்கம் கிடைக்காமல் போகும் பொழுது அது ஒரு சில புற்று நோய்களை கூட உண்டாக்கலாம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் அலட்சியமாக படுக்கையறையில் நிம்மதியாக தூங்குவதை விட்டுவிட்டு, மொபைல் ஃபோனை நோண்டுவது, டிவி பார்ப்பது, கேம் விளையாடுவது போன்றவற்றை செய்கிறோம்.
எனவே தினமும் போதுமான நேரம் தூங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கைக்கு சென்ற பிறகும் தூக்கம் வரவில்லை என்றால், தியானம் செய்வது அல்லது மூச்சு பயிற்சிகள் செய்வது போன்றவற்றை நீங்கள் முயற்சி செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பிலிருந்து காஃபின் சேர்க்கப்பட்ட பானங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது தூக்கத்தை சீர்குலைக்கலாம்.
புகையிலையை தவிர்க்கவும் : எந்த வடிவத்திலும் புகையிலை எடுத்துக் கொள்ளக் கூடாது. புகைப்பிடித்தல், வெற்றிலை பாக்குடன் புகையிலை சேர்த்து சாப்பிடுவது அல்லது மூக்குப்பொடி, ஹான்ஸ் போன்ற எந்த ஒரு வடிவிலும் புகையிலேயே எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த பழக்கத்தில் இருந்து உங்களால் விடுபட முடியவில்லை என்றால், தகுந்த சிறப்பு நிபுணர்களை அணுகி அதில் இருந்து விலகி இருக்க தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
தவறான உணவு பழக்கம் : நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த பழக்கம் உண்டு. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது, கண்ட நேரத்தில் உணவு சாப்பிடுவது, நடு இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, அதிகப்படியான காஃபின் எடுத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை கைவிடுங்கள். இதனால் உடற்பருமன், நீரிழிவு நோய், ஹைப்பர் டென்ஷன் மற்றும் இதய நோய் ஏற்படுவது தவிர இந்த கெட்ட உணவு பழக்கங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சிகளை குறைந்த அளவில் சாப்பிடவும். முடிந்த அளவு வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உணவு பழக்கங்களை பின்பற்றுங்கள்.
மது அருந்தும் பழக்கத்தை கைவிடுங்கள் : மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏராளமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். மிதமான அளவு மது அருந்தினால் உடலுக்கு கேடு விளைவிக்காது என்றாலும், வழக்கமான முறையில் மது அருந்துவது ஒருவரை காலப்போக்கில் அதிகப்படியான மது அருந்த தூண்டலாம். மது அருந்துவது கல்லீரலை மிக மோசமாக பாதித்து புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தின் நிம்மதியையும் சீர்குலைத்து விடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
சோம்பேறித்தனத்தை தூரவிரட்டுங்கள் : நமது முன்னோர்களை ஒப்பிடும் பொழுது நமது வாழ்க்கை அதிக அளவில் சோம்பேறித்தனமான வாழ்க்கையாக மாறிவிட்டதை நம்மால் உணர முடிகிறது. உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது, அதிக நேரம் டிவி அல்லது கேட்ஜெட்டுகளில் செலவிடுவது போன்ற நாம் தினந்தோறும் செய்யக்கூடிய அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை 5 முதல் 10 நிமிடம் பிரேக் எடுத்துக்கொண்டு, சிறிய தூரம் நடப்பது, கை கால்களை அசைப்பது போன்றவற்றை செய்யுங்கள். பின்னர் தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு எந்த ஒரு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இயற்கையோடு நேரத்தை செலவழியுங்கள். உடலில் இருந்து வியர்வை வெளியேறும் அளவு விளையாடுவது அல்லது உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை செய்யுங்கள். இவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.
கெட்ட பழக்கங்களை நாம் எளிதாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதிலிருந்து வெளிவருவது சாதாரண காரியம் அல்ல. எனினும், அவ்வாறு செய்துவிட்டால் நமது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றிக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட கெட்ட பழக்கங்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் கூட இன்றே அதனை கைவிடுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உங்கள் உடலையும், வாழ்க்கையையும் கவனித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.
0 Comments:
Post a Comment