இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் கண்டன்ட் கிரியேட்டர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது சம்மந்தமான வேலைவாய்ப்புகள் மட்டுமே தங்களது தளத்தில் 117 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Indeed வலைதளம் கூறுகிறது.
மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு பதிவுகளை க்ளிக் செய்யும் போக்கும் 75.30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என இத்தளம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால், இதுபோன்ற இன்ஃப்ளூயென்சர்கள் மார்கெட்டிங் வேலைகளுக்கான விளம்பரங்கள் பெங்களூரு நகரத்தில்தான் அதிகமாகப் பதிவிடப்படுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் இன்ஃப்ளூயன்சர் மார்கெட்டிங் தலைநகரமாக பெங்களூரை அழைக்கிறார்கள். Indeed தளத்தின் தரவுகளை வைத்து பார்க்கும் போது, இன்ஃப்ளூயென்சர் மற்றும் கண்டன்ட் கிரியேட்டர்கள் தொடர்பான வேலைவாய்ப்பு சந்தையில் பெங்களூரு நகரத்தின் பங்கு மட்டுமே 16 சதவிகிதமாகும். 9 மற்றும் 7.5 சதவிகிதங்களைப் பெற்று இதற்கடுத்த இடங்களை டெல்லியும் மும்பையும் பிடித்துள்ளது.
அதேசமயத்தில், ஜெய்பூர், சூரத், இந்தூர் போன்ற நகரங்களில் இன்ஃப்ளூயன்சர் மார்கெட்டிங் பதவிகளுக்கு குறைவான வேலைவாய்ப்புகளே நிலவுகிறது. இந்நகரங்கள் யாவும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்களிப்பையே கொண்டுள்ளன.
ஐடி நிறுவனங்களின் மையமாகவும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாலும் பெங்களூரு நகரம் இதில் முதலிடத்தில் இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால், இங்குள்ள நிறுவனங்கள் பலவும் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தங்களது பிராண்டை மக்கள் மனதில் நிலை நிறுத்தவும் அனுபவமும் திறமையும் மிக்க இன்ஃப்ளூயன்சர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.
இன்றைய டிஜிட்டல் காலத்தில், வாடிக்கையார்களோடு உரையாடவும் அவர்களை தொடர்பு கொள்ளவும் டிஜிட்டல் தளங்களையே பல நிறுவனங்களும் நம்பியிருக்கின்றன. உண்மையில், இதுவரை நிறுவனங்கள் நுழைய முடியாத இடங்களில் எல்லாம் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தி, மிகப்பெரிய தாக்கத்தை இந்த இன்ஃப்ளூயன்சர்கள் ஏற்படுத்துகிறார்கள். இதுவே வேலைவாய்ப்புச் சந்தையில் எதிரொலிக்கிறது.
யாருடைய உதவியும் இல்லாமல் உங்களுடைய முயற்சியினால் வெற்றிகரமான இன்ஃப்ளூயன்சராகவோ அல்லது கண்டண்ட் கிரியேட்டராகவோ நீங்களும் ஆகலாம். எனினும், இதுபோன்ற வேலைகளுக்கு தொழில்முறையாக செய்து வருபவர்களே பெரிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டண்ட் கிரியேட்டர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்திலும் இந்தப் போக்கு தொடரக்கூடும்
இன்று பலரும் இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள். சாதாரண ஊசி முதல் டிவி, பிரிட்ஜ் வரை வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் எளிதாக வாங்குகிறார்கள். ஆகவே இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்தி தங்களுக்கான வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்ளலாம் என பல தொழில் நிறுவனங்கள் நினைக்கின்றன.
இதன் காரணமாக அனுபவமும் மக்களை எளிதில் ஈர்க்கக்கூடிய திறமையுள்ள கண்டண்ட் கிரியேட்டர்களுக்கும் இன்ஃப்ளூயென்சர்களுக்குமான தேவை அதிகரித்துள்ளது. நீங்களும் திறமையான கண்டன்ட் கிரியேட்டராகவோ அல்லது இன்ஃப்ளூயென்சராகவோ இருந்தால், உங்கள் வீட்டில் இனி பண மழை கொட்டுவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment