உங்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வருகிறதா..? அப்படியென்றால் உங்கள் தலையணை கூட பிரச்சனையாக இருக்கலாம்..! - Agri Info

Adding Green to your Life

August 15, 2023

உங்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வருகிறதா..? அப்படியென்றால் உங்கள் தலையணை கூட பிரச்சனையாக இருக்கலாம்..!

 எனக்கு இந்த மாதிரி தலையணை தான் வேண்டும் என ஒவ்வொருவருக்கும் விருப்பம் இருக்கும். சிலருக்கு உறுதியான தலையணையில் படுத்தால் தான் தூக்கம் வரும். வேறு சிலருக்கோ, மென்மையான, பஞ்சு போன்ற தலையணைகளை விரும்புவார்கள்.

எந்த தலையணையை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், அவை உங்களுக்கு எந்த தொந்தரவையும் தராமல் இருக்க வேண்டும். குறிப்பாக தலையணை பயன்படுத்துகையில், உங்கள் தலையும் கழுத்தும், உங்களுடைய முதுகுதண்டோடு நேராக இருக்க வேண்டியது அவசியம். பலரும் போதுமான உயரம் வேண்டும் என்பதற்காக, பல தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருப்பார்கள். இப்படியெல்லாம் அதிகமான தலையணைகளை பயன்படுத்தினால், உங்கள் தூக்கம் மட்டுமின்றி உடல்நலனும் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரவில் தொடர்ந்து உங்களுக்கு கழுத்து வலி ஏற்பட்டால், உடனடியாக உங்கள் தலையணையை மாற்ற வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

தூங்குவதற்கு எத்தனை தலையணைகள் வேண்டும்?

தூங்கும் போது ஒன்றா அல்லது இரண்டு தலையணை பயன்படுத்த வேண்டுமா என பல விவாதங்கள் நடைபெறுகிறது. இது நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு கொஞ்சம் உயரமாக இருந்தால் நன்றாக இருக்கும். வேறு சிலருக்கோ தலையணை இல்லாமல் படுத்தால்தான் நன்றாக இருக்கும். பொதுவாக, ஒரு தலையணை பயன்படுத்துவதே நல்லது. அப்போதுதான் நீங்கள் தூங்கும் போது சுவாசமும் ரத்த ஓட்டமும் நன்றாக இருப்பதோடு காலையில் எழும்போது எந்த உடல் வலியும் இருக்காது. ஒருவேளை உங்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இரண்டு தலையணைகளை பயன்படுத்துவது உங்களுக்கு வசதியாக இருக்கும்.

என்னுடைய தூங்கும் நிலையை பொறுத்து, எத்தைனை தலையணை தேவைப்படும்?

எத்தனை தலையணைகள் பயன்படுத்தலாம் என குழப்பமாக இருக்கிறதா? நீங்கள் எப்படி படுத்து தூங்குவீர்கள் என்பதை பொறுத்து இது மாறுபடும்? சாய்வாகவா அல்லது நேராகவா அல்லது குப்புற படுத்து தூங்குவீர்களா? இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமென்றால், நீங்கள் தூங்கும் நிலையை பொறுத்து தலையணையின் எண்ணிக்கையும் மாறுபடும்.

சாய்வாக சரிந்து படுப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிதமான, அதே சமயத்தில் கொஞ்சம் உறுதியான தலையணை பயன்படுத்தினால், உங்கள் கழுத்தும் தலையும் தோள்களோடு சீராக அமைந்திருக்கும். சாய்வாக படுப்பவர்களின் முழங்கால்கள் எப்போதும் ஒரு காலுக்கு மேல் இன்னொரு கால் சேர்ந்தார்ப் போல் இருக்கும். இவர்கள் தங்கள் கால்களுக்கு இடையே ஒரு தலையணையை பயன்படுத்தும் போது வசதியாக உணர்வார்கள். ஆகவே, சாய்வாக படுப்பவர்களுக்கு தூங்கும் போது இரு தலையணைகள் தேவைப்படும்.
நேராக படுத்து தூங்குபவரா? அப்படியென்றால் மிதமான உறுதித்தன்மை மற்றும் 3-5 இன்ச் தடிமன் கொண்ட ஒரு தலையணை உங்களுக்கு போதும். இந்தளவிற்கு உங்கள் தலையணை தடிமன் இல்லையென்றால், இதே உயரம் வரும் அளவிற்கு இரண்டு தலையணையை பயன்படுத்துங்கள். நேராக படுக்கும் போது இன்னும் வசதி குறைவாக உணர்கிறீர்கள் என்றால் பின்புறமாக முதுகிற்கு பக்கத்தில் உங்களுக்கு ஏற்ற வகையில் இன்னொரு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் குப்புற படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இப்படி படுத்து தூங்கவே கூடாது. சரியான தலையணையை பயன்படுத்தவிட்டால், குப்புற படுத்து தூங்கும் போது அசௌகர்யமாக உணர்வதோடு காலையில் உடல் வலியோடு எழும்புவீர்கள். இப்படி குப்புற படுத்து தூங்குபவர்கள், மெலிதான தலையணையை பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது மிகவும் நல்லது. ஏனென்றால் குப்புற படுக்கும் போது உங்கள் வயிறு நேராக தரை மட்டத்தில் இருக்கிறது. இப்போது நீங்கள் தலையணை பயன்படுத்தினால் உங்கள் கழுத்து மட்டும் சற்று உயரமாக இருக்கும். இதனால் கழுத்து வலி வரக்கூடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment