நம்மில் பெரும்பாலானோர் தினமும் போதுமான அளவு தூக்கத்தை பெறுவதில்லை. நமது பணிச்சுழல் காரணமாக தூக்கத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நீண்ட காலத்திற்கு சரியான தூக்கம் பெறாமல் இருப்பது நமது உடலை மட்டுமல்லாமல் மனதையும் பெருமளவு பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் இதனால் ஒரு சில நரம்பு சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. தூக்கமானது நமது மனநிலை, ஆரோக்கியம் மற்றும் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தூங்கும் பொழுது நமது மூளை பல்வேறு விதமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நாள் முழுவதும் நடந்த விஷயங்களை நமது மூளை நினைவுகளாக சேமிக்கிறது. இது போன்ற ஒரு நிலையில் நாம் போதுமான அளவு தூங்காத போது மூளையினால் அந்த செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகிறது. இதன் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் எழுகிறது. நன்றாக தூங்குவது முடிவு எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. அதோடு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறன்களையும் மேம்படுத்துகிறது.
ஒரு நபர் தொடர்ச்சியாக 7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தை பெற்று வரும் பொழுது அவரது கவனிப்பு திறன் நாளுக்கு நாள் குறைகிறது. இது கற்கும் செயல்முறையில் பாதிப்பை உண்டாக்குகிறது. கூடுதலாக போதுமான அளவு தூக்கம் பெறாதது நமது மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்பொழுது போதுமான அளவு தூக்கம் பெறாததால் ஏற்படக்கூடிய ஒரு சில நரம்பு சார்ந்த பிரச்சனைகளை பார்க்கலாம்.
இன்சோம்னியா: நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனை ஆபத்து நிறைந்த புரதங்களான பீட்டா அமைலாய்டு அதிக அளவில் மூளையில் படிய காரணமாகிறது. இது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இது உணர்வு சார்ந்த சிக்கல்கள் மற்றும் குறைந்த கவனிப்பு திறன் போன்ற விளைவுகளை ஏற்படுகிறது.
அல்சைமர்:
சீர்குலைக்கப்பட்ட தூக்க அட்டவணை மற்றும் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனை காரணமாக எழக்கூடிய நரம்பு சார்ந்த பிரச்சனை இது. தூங்கும் பொழுது நமது மூளையில் இருக்கக்கூடிய பீட்டா அமைலாய்டு போன்ற ஆபத்து நிறைந்த கழிவு பொருட்களை அகற்றும் செயல்முறை நடைபெறுகிறது. ஆனால் போதுமான அளவு தூக்கம் பெறாமல் இருக்கும் பொழுதோ அல்லது தூக்க அட்டவணையில் சீர்குலைவு ஏற்படும் பொழுது இந்த நச்சுக்கள் நமது மூளையில் சேகரிக்க துவங்குகிறது. இது அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும்.
ஸ்லீப் ஆப்னியா: தூங்கும் பொழுது அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது ஸ்லீப் ஆப்னியா எனப்படும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. இது மனநிலை ஆரோக்கியத்தை பாதிக்கும், அதோடு ஞாபகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது.
நார்கோலெப்சி: தூக்க-விழிப்பு சுழற்சியை (sleep-wake cycle) சீராக நடத்துவதற்கான திறனை மூளை இழக்கும் பொழுது நார்கோலெப்சி ஏற்படுகிறது. நார்கோலெப்சியை அனுபவிக்க கூடிய நபர் பகல் நேரத்தில் அதிகப்படியான நேரம் தூங்குவார். இதுவும் ஒரு நபரின் மனநிலை, ஞாபக சக்தி மற்றும் கவனிப்பு திறனை பாதிக்கும்.
இரவு நேரத்தில் போதுமான அளவு தூங்குவதன் முக்கியத்துவம் என்ன? நமது மூளை திறம்பட செயல்படுவதற்கு இரவு நேரத்தில் போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும் பொழுது நமது மூளையில் இருக்கக்கூடிய ஆபத்து நிறைந்த நச்சுக்கள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றப்படுகிறது. இது மூளையின் ஆரோக்கியம் மற்றும் மனநிலை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு செயல்பாடு. கூடுதலாக நினைவுகளை சேகரிப்பது, கற்கும் திறன் மற்றும் மனநிலையை மேம்படுத்துவது போன்ற செயல்பாடுகளிலும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்க-விழிப்பு சுழற்சியில் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது. இருட்டிற்கு பதிலளிக்கும் விதமாக நமது மூளையில் அமைந்துள்ள பீனியல் கிளாண்ட் மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
ஒரு சில பழக்கவழக்கங்கள் மூலமாக மெலடோனின் அளவுகளை இயற்கையாக அதிகரிக்கலாம். இதற்கு முதலில் எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிப்படக்கூடிய ப்ளூ லைட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும். குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் படுக்கைக்கு செல்லும் பொழுது மனதை அமைதிப்படுத்த கூடிய செயல்பாடுகளான தியானம், புத்தகம் வாசிப்பது போன்றவற்றை செய்வதும் உதவக்கூடும். பகல் பொழுதில் இயற்கையான சூரிய ஒளியை பெறுவதும் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து நமது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
No comments:
Post a Comment