கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது என்று சொல்வார்கள். அதுபோலத்தான் சப்ஜா விதைகளும். பார்ப்பதற்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலும், இதன் மூலமாக நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பலன்கள் பல. சப்ஜா விதைகளை நேரடியாக சாப்பிடுவதை காட்டிலும், ஊற வைத்து எடுத்துக் கொண்டால் அதன் பலன்கள் இன்னும் சிறப்பாக அமையும்.
சப்ஜா விதைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புச்சத்தை கொடுக்கும். இதனால் நம் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். பழங்கால மருத்துவத்தில் முக்கியத்துவம்.
இந்தியர்களின் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவம் ஆகிய இரண்டிலும் சப்ஜா விதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு எள்ளு விதைகளைப் போல உள்ள சப்ஜா விதைகளில் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
மினரல்கள் நிறைந்தது : நம் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதற்கு கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் மிகவும் அவசியமானவை. அனேக மக்களுக்கு தினசரி சாப்பிடும் உணவில் இருந்து இந்த மினரல்கள் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை. ஆனால் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அபரிமிதமாக அடங்கிய சப்ஜா விதைகளை தினசரி எடுத்துக் கொண்டால் அதன் பற்றாக்குறையை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.
நார்ச்சத்துகளின் சொர்க்கம் : நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், குடல் நலனுக்கும் இன்றியமையாத தேவையாக உள்ள நார்ச்சத்து சப்ஜா விதைகளில் இருந்து கிடைக்கிறது. குறிப்பாக சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மிகுதியான உணவு சாப்பிடும் பழக்கம் குறைகிறது. ஆக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பும் நபர்கள் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
ரத்த சர்க்கரை கட்டுப்படும் : சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக சாப்பிட்டபின் ரத்தத்தில் துரிதமாக அதிகரிக்கின்ற சர்க்கரையை 17% சதவீதம் வரையில் குறைக்கின்ற ஆற்றல் சப்ஜா விதைகளுக்கு உண்டு.
தாவர சத்துக்கள் : தாவர வகை உணவுகளில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய பாலிபினால்ஸ், ஃபிளவோனாய்ட்ஸ் ஆகியவை சப்ஜா விதைகளில் கிடைக்கும். அழற்சிக்கு எதிரான பண்புகளும், புற்றுநோயை தடுக்கக்கூடிய தன்மையும் சப்ஜா விதைகளில் உண்டு.
குடல் நலனுக்கு நல்லது : சப்ஜா விதைகளில் புரோபயாட்டிக் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. குடலுக்கு நன்மை கிடைக்கும் நல்ல பாக்டீரியா இதன் மூலமாக கிடைக்கிறது. குடலில் அழற்சி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கிறது.
Click here for more Health Tip
No comments:
Post a Comment