கோடை காலம் வந்துவிட்டால் நம் மனம் குளிர்ச்சியான பானங்களை தேடுவது இயல்பானது தான். அதே சமயம் தினசரி மிகுந்த குளிர்ச்சியான நீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. டீ அல்லது காஃபி போன்ற பானங்களை தவிர்க்க முடியாத சூழல் போலவே குளிர்பானங்களை தவிர்க்க முடியாத நிலையில் பலர் உள்ளனர்.
குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே குளிர்பானங்களை மிக அதிகமாக அருந்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாடிக்கையாக குளிர்பானங்கள் அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நீடித்த கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மெனோபாஸ் அடைந்த 98,786 பேர் பங்கேற்றனர். மகளிர் ஆரோக்கிய முயற்சி என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் தேவைப்படும் இதய நோய், மார்பக நோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தினசரி ஒருமுறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை குளிர்பானம் அருந்தும் பெண்களில் 6.8 சதவீதம் பேருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 85 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரியவந்தது. மேலும் நீடித்த கல்லீரல் அழற்சியால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கான அபாயம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை மாதத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக அருந்துகின்ற சாதாரண மக்களிடம் ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஆய்வில் பங்கேற்ற முன்னணி ஆய்வாளர், “லாங்காங் ஜஹோ கூறுகையில், “எங்களுக்கு தெரிந்தவரையில், செயற்கை குளிர்பானங்கள் பயன்பாடு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுதான்” என்று தெரிவித்தார்.
ஃபைப்ரோசிஸ், சிரோசிஸ், நீடித்த கல்லீரல் அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மருத்துவ ஆய்வு மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மூலமாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டன என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கல்லீரல் பாதிப்பு தொடர்பாக இன்னும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் அவர்களுக்கு கூறினர்.
தங்கள் ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார். தற்போது ஆய்வக பரிசோதனை அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும், இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்கின்ற போது கல்லீரல் நோய் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment