Search

உங்கள் பிள்ளைகள் உயரமாக வளர வேண்டுமா..? இந்த 2 விஷயங்கள் சரியாக இருந்தாலே போதும்..!

 பெற்றோர் அனைவருக்கும் தங்களுடைய பிள்ளைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருப்பது மிகவும் இயல்பான நியாயமான ஆசை தான். ஆனால் சில நேரங்களில் மரபணு காரணங்களினாலும் வேறு சில குறைபாடுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக தங்களது குழந்தை சரியான உயரத்துடன் வளர வேண்டும் என்பது பெற்றோர்களின் மிகவும் சாதாரண ஒரு ஆசையாகும். உண்மையில் ஒரு குழந்தையின் உயரமானது அதன் மரபணுவை சார்ந்து இருந்தாலும், மரபணுவை தவிர வேறு சில விஷயங்களும் அவர்களின் உயரத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

வெறும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் என்று இல்லாமல் குழந்தையின் மன நலனும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உங்களது குழந்தை ஆரோக்கியமாகவும் சரியான உயரத்துடனும் வளர என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

குழந்தைகளின் உயரத்தில் மன ஆரோக்கியத்தின் பங்கு: குழந்தைகளின் உயரமானது அவர்கள் மனதளவில் எந்த அளவிற்கு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்பதை பொருத்து அமைவதாக உயிரியல் மானுடவியலாளரான பேராசிரியர் பேரி போகின் குறிப்பிட்டுள்ளார். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களின் வளர்ச்சியை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன ஆரோக்கியம் ஹார்மோன்கள் மற்றும் உயரம்: பேராசிரியரை பொறுத்தவரை பிள்ளைகள் எப்போதும் தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும், தனக்கு மிகவும் பிடித்தவர்களிடமிருந்தும் அன்பை அதிகம் எதிர்பார்க்கும். ஒருவேளை தான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கவில்லை எனில் இது மனதளவில் மிகப்பெரும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். இவை நேரடியாக உடல் வளர்ச்சியிலும் பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக உடல் வளர்ச்சி மற்றும் உயரத்திற்கு காரணமான ஹார்மோன்கள் சுரப்பதில் தடையை ஏற்படுத்துகிறது. இவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் போன்ற காரணிகளும் சேர்ந்து குழந்தை உயரமாக வளர்வதை பாதிக்கின்றது.

மரபணுவின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது : பிள்ளைகளின் மன ஆரோக்கியம் அவர்களின் உயரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், அவர்களின் மரபணு பற்றிய விஷயத்தை நாம் முழுவதுமாக ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் பிள்ளைகளின் உயரம் பெரும்பாலும் அவர்களது மரபணுவை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் மொத்தமாக மரபணு மட்டும் காரணம் என்றோ அல்லது ஒட்டுமொத்தமாக மனநலம் மட்டுமே காரணம் என்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

பிள்ளைகளை அன்புடன் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் : பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் தேவையான நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக குடும்பமாக சேர்ந்து மகிழ்ச்சியாக நேரம் செலவழிப்பது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த உதவும். மேலும் பிள்ளைகளின் முயற்சியையும் அவர்களின் சாதனைகளையும் பெற்றோர் பாராட்ட வேண்டும் இவை அவர்களின் மனதில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கி தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.

பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான சூழலை உண்டாக்க வேண்டும் : பிள்ளைகள் உணர்வு ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியான ஒரு சூழலை பெற்றோர்கள் உண்டாக்க வேண்டும். குறிப்பாக அவர்களது அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஆகியவற்றை சரியாக அளிப்பதின் மூலம் பிள்ளைகள் அவற்றைப் பற்றி கவலை கொள்ள தேவையற்ற நிலை உண்டாகிறது. அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தாலே அவர்களின் எண்ணங்களும், உணர்வுகளும் சீராக இருக்கும். இதனால் பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பதுடன் விரைவாக விஷயங்களை கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும் முடியும்.



0 Comments:

Post a Comment