தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 இலட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் (Aavin Franchise Parlour) என்பது ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய ஆவின் விற்பனை நிலையமாகும். இவ்வகையான பாலகம் அமைக்க குறைந்தபட்சம் 64 சதுர அடி முதல் 225 சதுர அடி வரையிலான இடம் மட்டுமே போதுமானது.
புதிய சில்லறை விற்பனை நிலைய பாலகம் அமைப்பதற்கு அதன் பரப்பளவு மற்றும் வடிவமைப்புக்கு ஏற்றார்போல் சுமார் 1.50 லட்சம் முதல் 6 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும், ஆவின் நிறுவனத்திற்கு ரூ.30,000/- மட்டுமே வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டமும் மற்றும் பாலகம் அமைக்கும் இடத்தை பொறுத்து, மாதந்தோறும் சுமார் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை விற்பனையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பாலகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் 48 மணி நேரத்திற்கு முன்பே ஆவின் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட பொருட்கள் ஆவின் நிறுவன வாகனம் அல்லது மொத்த விற்பனையாளர் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன பால் உபபொருட்களுக்கு குறைந்தபட்சம் 8% முதல் 18% வரை கமிஷன் வழங்கப்படும். இப்பாலகத்தில் ஆவின் பால் உபபொருட்களை கொண்டு மில்க்ஷேக், லஸ்ஸி, சுடுபால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், 'தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் இல்லம், 3A,பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 600 035 , தமிழ்நாடு' என்று முகவரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள 9043099905, 9790773955, 9566860286 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment